தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிரான வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த பர்வதம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கணிதத் துறை மற்றும் கல்வியியல் துறையில் பட்டம் பெற்றுள்ளேன். 2013-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றேன். வெயிட்டேஜ் முறையால் 0.25 மதிப்பெண் குறைவால் எனக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. பின்னர் போட்டித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு 2018 ஜூலை 20-ல் உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போது தமிழகத்தில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்ததால் தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு பிறப்பித்துள்ளது.
அந்த வழிகாட்டுதல்களில் இடஒதுக்கீடு, முன்னுரிமை தொடர்பாக எதுவும் கூறப்படவில்லை.
எனவே, இடஒதுக்கீடு, முன்னுரிமை உள்ளிட்ட முறையான வழிகாட்டுதல்கள் இல்லாமல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க தடை விதித்தும், தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்தும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு, நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் வரம்புக்கு உட்பட்ட மாவட்டங்களில் தடை காரணமாக தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறை தொடங்கவில்லை. சென்னை உயர் நீதிமன்ற வரம்புக்கு உட்பட்ட மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் நியமன நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பும், உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பும் ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு அனுப்ப பதிவாளருக்கு உத்தரவிடப்படுகிறது என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக