தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 2 டாக்டர்கள் ஒதுக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்கும் சிறப்பு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்க உள்ளார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறினார். திருப்பூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: திருப்பூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கான பேட்ரி டெஸ்ட் என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இந்த பேட்ரி டெஸ்ட் நடைபெறும். பேட்ரி டெஸ்ட் என்றால் குழந்தைகளுக்கு நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், தொடர் ஓட்டம், நீண்ட தூர ஓட்டம் இதுபோன்ற திறமைகளை கண்டறிந்து, அவர்கள் எந்த போட்டியில் சிறந்து விளங்குகிறார்களோ அதில் பயிற்சி பெற வைத்து மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு தேவையான உதவிகளை அரசு செய்து கொடுக்கும். தற்போது இது 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான திட்டம். இதுபோல் மண்டல அளவிலான தேர்வு செய்யப்படுகிற 10 பேருக்கு ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் ஒரு திட்டத்தை விரைவில் தொடங்கி வைக்க இருக்கிறார். இத்திட்டத்தின்படி மாநிலத்தில் கல்வி ஒன்றியம் 413 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் 2 டாக்டர்கள் ஒதுக்கப்பட்டு, தங்களது பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு கவுன்சலிங் வழங்குவார்கள். இது மொத்தம் 800 மருத்துவர்களை கொண்ட திட்டம். இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக