இந்த வலைப்பதிவில் தேடு

AIFETO - நம்பிக்கை மாநாடு நம்பிக்கை இழந்து போனதேன்?

திங்கள், 12 செப்டம்பர், 2022

 

ஜாக்டோ-ஜியோ சார்பில்  செப்டம்பர் 10, சென்னை தீவுத்திடலில் வாழ்வாதார நம்பிக்கை மாநாடு நடைபெற்றது. ஜாக்டோ-ஜியோ அமைப்பின் வேண்டுகோளினை ஏற்று தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் இருந்து பேருந்துகள், வேன்கள், கார்கள், தொடர் வண்டிகள் மூலம் பயண மாற்றி சென்னையே சிலிர்த்திடும் அளவுக்கு வாகனங்களின் அணி வகுப்பில் தீவுத்திடலை திணறடித்துக் கொண்டிருந்த ஒன்றுபட்ட இயக்கங்களுடைய கூட்டு சக்தியின் அடையாளங்களாக திரண்டிருந்தார்கள். மதியம்  2 மணி முதல் இரவு 8 மணி வரையில் குடிப்பதற்கு தண்ணீர் வசதி கூட இல்லாமல், இயற்கை உபாதைகளுக்கு கூட இடமளிக்காமல்  கட்டுப்பாட்டோடு முதல்வர் அவர்கள் அறிவிக்கும் அறிப்புகளுக்காக ஆர்வப் பார்வையுடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.


 மாண்புமிகு  தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் மாநாட்டு மேடைக்கு வருகை தந்தபோது லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள் கரவொலி எழுப்பி வரவேற்று மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி அவர்கள், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்,   நம்மீது உள்ள இதயப் பற்றுதல் காரணமாக வருகை தந்த மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் அவர்களும் தலைவர் கலைஞர் காலத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு செய்துள்ள நன்மைகளை பட்டியலிட்டு சொன்னார்கள். இதயம் நெகிழ்ந்து வரவேற்று மகிழ்ந்தோம்.   கலைஞர் அவர்களுடைய பிள்ளை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்து பல நன்மைகளை செய்து வருகிறார். உங்களுடைய கோரிக்கைகளுக்கு எல்லாம் தீர்வு காணவேண்டும் என்ற நம்பிக்கை  உங்களைப் போலவே எங்களுக்கும்  உள்ளது என்றும்,  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்ன அறிவிக்கப் போகிறார்கள் என்று உங்களைப் போலவே  நாங்களும் கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறோம் என்று பேசி அமர்ந்தார்கள்.


 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் உரையாற்ற வந்த போது தீவுத்திடலே அதிரும் அளவிற்கு கரவொலிகள்  மூலம் இதயத்து உணர்வுகளை  வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அவருக்கே உரிய பாணியில் உரையாற்றிய போது பொதுவாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் மாநாட்டில் அரசியல் பேசுவது இல்லை என்றாலும்,   இங்கு பேசாமல் வேறு எங்கு பேச முடியும்?. என்றும்,  ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆதரவுதான்  என்பதை நாங்கள் மறக்க மாட்டோம் என்றும்,  நன்றியுடன் இருப்போம் என்றும், உங்களில் ஒருவனாக என்றும் இரண்டற கலந்து இருப்பேன் என்றும் தலைவர் கலைஞர் அவர்கள் பாணியில் பேசினார்கள்.


குறிப்புகளை கையில் எடுத்துக்கொண்டு கடந்த காலத்தில் வழங்கிய அகவிலைப்படி  அறிவித்தது, யுனைடெட் மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் காப்பீடு வழங்கியது போன்றவற்றை எல்லாம் வரிசைப்படுத்தி பேசினார்கள்.    நான் இங்கு வருவதற்கு முன்னர்  சில கோப்புகளில் கையொப்பமிட்டு வந்துள்ளேன். அதில் ஒன்று முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் கல்வி நிர்வாக சீர்திருத்தம்  என்ற பெயரால் மாற்றியமைக்கப்பட்ட  அரசாணை எண்: 101 ரத்து செய்யப்பட்டுள்ளது.  தொகுப்பூதியத்தில் நியமனம் பெற்றுள்ள சிறப்பாசிரியர்கள் 60 வயது வரை  பணியாற்றுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், அவர்கள் கலந்தாய்வு மூலம் இடமாறுதல் பெறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். என்ற  அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டார்கள். முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பில் ஆணையர் பதவி விடுவிக்கப்பட்டு உள்ளதா? என்று தெரியவில்லை. SCERT, சுயநிதி  பள்ளிகளுக்கு கூடுதல் இணை இயக்குனர்கள், கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் பணியிடங்களுக்கு நிதித்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது.  இந்த அறிவுப்புகள் வரவேற்கப்பட வேண்டிய அறிவிப்புகள் தான். ஆனால் உ.பி மாநில யோகி அரசின் கல்விக்கொள்கையினை முந்தைய ஆட்சியாளர்கள் காலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்ததை திராவிட மாடல் ஆட்சி மே மாதம் அமைந்தபோதே உ.பி மாடல் கல்வி நிர்வாகத்தினை அறவே நீக்கிவிட்டு பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் கால கல்வி நிர்வாக கட்டமைப்பினை மீண்டும் தமிழ்நாட்டில் கொண்டு வரவேண்டும் என்று ஓய்வறியாத குரல் மூலம் தொடர்ந்து வலியுறுத்துக் கொண்டே இருந்தோம்.  யோகி அரசின் கல்விக்கொள்கையினை அப்புறப்படுத்துவதற்கு மாநாடு நடத்துகிற முதல்நாள் இரவு வரையில் காலம் எடுத்துக்கொண்டது நியாயம்தானா?.. இந்த கோரிக்கையில் திராவிட மாடல் கட்சியினுடைய தன்மானமும் பாதிக்கப்பட்டு இருந்ததை மறக்கத்தான் முடியுமா?..


 வாழ்வாதார நம்பிக்கை மாநாடு என்று தலைப்பிட்டு மாநாடு நடத்தியதன் வெளிப்படையான முதன்மையான நோக்கம் புதிய ஓய்வூதிய திட்டத்தால் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ள 6 லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்களுக்கு   நம்பிக்கை தரும்  மாநாடாக அமையும் என்று தான் நாங்கள் நம்பினோம்... வங்கக் கடல் அலைகளோடு போட்டி போட்டுக்கொண்டு அலைமோதிய கூட்டமும் காத்துக்கொண்டிருந்ததும் அதற்காகத்தான். ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மறந்தும் ஒரு வார்த்தையினைக் கூட பழைய ஓய்வூதியத் திட்டத்தினை நாங்கள் அளித்துள்ள வாக்குறுதிப்படி நிறைவேற்றுவோம்!.. என்பதை இந்த மாநாட்டில் உங்களில் ஒருவனாக உறுதியளித்து செல்கிறேன்!..  அதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து உடனடியாக பணி தொடங்கப்படும்!.. என்று அறிவிப்பார் என்று நம்பிக்கையுடன் இருந்தோம். அப்படி அறிவித்து இருந்தால் கூட அரசாணையாக  வெளிவருவதற்கு ஆறு மாதத்திற்கு மேல் ஆகும். எந்த உறுதிமொழியையும்  அவர் அறிவிக்கவில்லை.  ஆட்சிப் பொறுப்பேற்று 15 மாத காலமாக சட்டப்பேரவையிலும்  ஒரு நாள் கூட இந்த உறுதியினை அளிக்கவில்லை. மாநாட்டிலும் அந்த கோரிக்கையினை மறந்தது மட்டுமல்ல; கைவிட்டதைப் போல நினைவு படுத்தாமல் சென்றுவிட்டார்கள். எதிர்பார்த்தவர்களின் நெஞ்சம் பதறாமல் எப்படி இருக்கமுடியும்?..


நீண்ட கால கோரிக்கையான இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு வருகிறார்கள் அந்த கோரிக்கையும் பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்லி இருக்கலாம். பேரறிஞர் அண்ணா அவர்கள் கொண்டு வந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பழைய நடைமுறைப்படி தொடர வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறீர்கள்!.. அந்த கோரிக்கையும் பரிசீலனையில் இருக்கிறது என்று சொல்லி இருக்கலாம். ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள் அனைவரும் பெற்று வந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில் முந்தைய ஆட்சியாளர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரண் விடுப்பினை  பணமாக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்ற கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது என்றாவது சொல்லி இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில் அனைத்து கோரிக்கைகளும் பரிசீலனையில் உள்ளது உங்களில் ஒருவனாக இருந்து அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவேன்!.. என்ற நம்பிக்கையை இந்த மாநாட்டின் மூலம் உறுதி அளிக்கிறேன்!... என்றாவது கூறியிருக்கலாம். பொதுவாக இது போன்ற மாநாட்டில்  முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டால் இப்படித்தான்   பேசுவது, அறிவிப்பது வழக்கம், ஆனால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையினை எவர்மீதும் காட்டவில்லை  என்பது வெளிப்படையாக தெரிய வருகிறது என்று இதன்  மூலம் உறுதியாகிறது.


 வாழ்வாதார நம்பிக்கை மாநாடு என்ற தலைப்பில் வாழ்வாதாரம் என்ற அடிப்படைச் சொல்  முற்றிலும் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. நம்பிக்கை தரும் மாநாடாக அமையாமல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் மீது கொண்டிருந்த நம்பிக்கை இழக்கும் மாநாடாகவே அமைந்துவிட்டது. நமது ரத்தநாளங்களாக  இருந்து இயக்கத்தினை இயக்கிக் கொண்டிருக்கிற அனைத்து  இயக்க உறுப்பினர்களின் நம்பிக்கையினை சங்கத் தலைவர்கள் இழந்து விட்ட உணர்வினை ஏற்படுத்திய மாநாடாகிவிட்டது. ஆசிரியர் சங்கங்களில்  நீண்டகாலமாக தனித்தன்மையுடன் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்த தன்மானத்தையும் இழந்த மாநாடாக  மாறிப்போய்விட்டது. உறுப்பினர்களின் நலனை மையப்படுத்தாமல் விளம்பரப்படுத்திக் கொள்வதில் தன் முனைப்பு காட்டியவர்களை அடையாளம் கண்டுகொண்ட மாநாடாக அமைந்துவிட்டது. பத்திரமாக பயணமாற்றி மாநாட்டிற்கு வருகை தந்து உள்ளீர்கள்!.. பத்திரமாக இல்லம் தேடிச் சென்று விட்டீர்கள்!...  என்ற செய்திதான் இந்த மாநாட்டின் மூலமாக இழப்பில்லாத தகவலாக அறிந்து ஆறுதல் அடைந்து வருகிறோம்.


 ஆசிரியர் சங்கங்கள் அவரவர் மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து கரம் கோர்த்து செயல்படுவோம்!.. நம்மவர்களை நம்மால் பாதுகாக்க முடியும்!..  என்ற நம்பிக்கை ஆழ்மனதில் நிறைந்து இருக்கிறது என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்!...


இதயப் பற்றுதலுடன்... உங்களின் சகோதரன்...


வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர், AIFETO (ALL INDIA FEDERATION OF ELEMENTARY TEACHERS ORGANISATIONS), அலைபேசி:9444212060, மின்னஞ்சல்: annamalaiaifeto@gmail.com. தமிழக ஆசிரியர் கூட்டணி. ஆர்வலர் மாளிகை, 52, நல்லதம்பி தெரு திருவல்லிக்கேணி சென்னை-5. மின்னஞ்சல் : taktaktak2014@gmail.com.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent