இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளி மாணவிகள் மோதல் - ஒரு வளாகத்தில் இரு பள்ளிகளை ஒருங்கிணைத்ததால் பிரச்னை

திங்கள், 19 செப்டம்பர், 2022

 




கட்டிட பழுது காரணமாக புதுவையில் இரு பள்ளிகளை ஒருங்கிணைத்து வகுப்பு நடந்து வந்த நிலையில், இன்று காலை அரசு பள்ளியில் இரு பள்ளி மாணவிகளுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் மாணவிகளை சமாதானப்படுத்தினார். புதுச்சேரி குருசுகுப்பத்தில் என்கேசி அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் 130 மாணவிகள் பயின்று வருகின்றனர். புதுவை புஸ்சி வீதி - செஞ்சி சாலை சந்திப்பில் இயங்கி வந்த சுப்பிரமணிய பாரதி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் பிளஸ்2 வகுப்புகளில் மொத்தம் 550 மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் கட்டிடம் பழுதடைந்த நிலையில், கல்விக் கற்க மாணவிகளுக்கு இடையூறாக இருந்தது.


இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிடப்பட்டது. அதன்பேரில் இப்பள்ளியானது கடந்த வாரம் குருசுகுப்பம் என்கேசி பள்ளியுடன் ஒருங்கிணைக்கப்பட்டது. இரு பள்ளியும் ஒருங்கிணைக்கப்பட்டதால் என்கேசி ஆசிரியர்களில் சிலரை கல்வித்துறை இடமாற்றம் செய்தது. இதையடுத்து சுப்பிரமணிய பாரதி ஆசிரியர்கள் தங்களிடம் பாகுபாடு காட்டுவதாக அவர்கள் புகார் செய்தனர். பள்ளியில் அடிப்படை வசதி குறைபாடுகளை சுட்டிக் காட்டி என்கேசி பள்ளி மாணவிகள் சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்திற்குபின் பள்ளி மாணவிகள் இடையே கருத்து வேறுபாடு மேலும் அதிகமானதாக தெரிகிறது.


இந்த நிலையில் இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது. அங்கு என்கேசி, சுப்பிரமணிய பாரதி பள்ளி மேல்நிலை மாணவிகள் வகுப்பறைக்கு வந்தனர். அப்போது அவர்களுக்குள் திடீரென மோதல் வெடித்தது. மாணவிகள் இருதரப்பாக கைகலப்பில் ஈடுபட்டனர். அவர்கள் கையில் இருந்த பேனா, ஸ்கூல் பேக், புத்தகங்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். அதன்பிறகு குருசுகுப்பம் செல்லும் சாலையில் என்கேசி பள்ளி மாணவிகள் மறியலில் ஈடுபட்டனர். இதனிடையே இத்தகவல் கிடைத்து இரு பள்ளி மாணவிகளின் பெற்றோரும் அங்குவந்து ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணிய பாரதி பள்ளி மாணவிகளின் பெற்றோர் சிலர், என்கேசி பள்ளி மாணவிகளை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. இதையடுத்து முத்தியால்பேட்டை போலீசார் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.


இதையடுத்து கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, கிழக்கு எஸ்பி வம்சித ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து இருதரப்பு மாணவிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை சமாதானப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனிடையே தகவல் கிடைத்து தொகுதி எம்எல்ஏவும், பொதுப்பணித்துறை அமைச்சருமான லட்சுமிநாராயணனும் பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.


அப்போது அதிகாரிகளை அழைத்து பள்ளிக்கு உடனே 4 நாட்கள் விடுப்பு அளிக்க அமைச்சர் உத்தரவிட்டார். விடுமுறை அறிவிப்பை தொடர்ந்து மாணவிகள் உடனடியாக பள்ளியில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். அதைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார். மாணவிகளிடையே மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent