இந்த வலைப்பதிவில் தேடு

“டவுசரில் நூல் பிரிந்து பாவாடை ஆச்சு... தரமான சீருடை தாங்க” - கருத்துக்கேட்பில் அதிரவைத்த அரசுப் பள்ளி மாணவன்!!!

புதன், 21 செப்டம்பர், 2022

 





“அரசு வழங்கிய சீருடை டவுசரில் நூல் பிரிந்து பாவாடை போல் ஆனது, இனிமேலாவது சீருடைய தரமான நூலில் தைத்துத் தரச் சொல்லுங்கள்” என மாநிலக் கல்விக் கொள்கை கருத்துக் கேட்பு கூட்டத்தில் பேசிய அரசுப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவனின் பேச்சால் அரங்கமே அதிர்ந்தது.


மதுரையில் புதன்கிழமை மாநில கல்விக் கொள்கை குறித்து உயர்மட்டக்குழுவின் மண்டல அளவிலான கருத்துக் கேட்புக் கூட்டம் அக்குழுவின் தலைவரும், ஓய்வுபெற்ற புதுடெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியுமான த.முருகேசன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். கருத்துகள் கூறியவர்களில் முக்கிய கருத்துகள் விவரம்:


நாகமலை புதுக்கோட்டை அரசுப் பள்ளி 4-ம் வகுப்பு மாணவன் நா.உதயன்: “நான் அரசுப் பள்ளியில் படிக்கிறேன். எனக்கு வழங்கிய சீருடையில் அளவு சிறிதாக இருந்தது. அதில் டவுசரை போட்டபோது, அதில் நூல் பிரிந்ததால் டவுசர் பாவாடைபோல் ஆனது. சட்டையை போட்டேன். அது ரொம்பச் சின்னதாக இருந்தது. எனது பெற்றோர் தனியாக சீருடை தைத்துக் கொடுத்தனர். அதைத்தான் நான் தற்போது அணிந்துள்ளேன். தமிழகம் முழுவதுமுள்ள ஒட்டுமொத்த அரசுப் பள்ளி மாணவர்களின் சார்பில் கேட்கிறேன். அடுத்துமுறையாவது தரமான நூலில் கிழியாத வகையில் சீருடையை தைத்துத்தரச் சொல்லுங்கள் ”என்றான். இதனைக் கேட்டு அரங்கமே அதிர்ந்தது.


ஓய்வு பெற்ற தேசிய நல்லாசிரியர் கண்ணப்பன்: "ஆசிரியர்கள் - மாணவர்களிடையே பிணைப்பு இருக்க வேண்டும். மாணவர்களுக்கு தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மன அழுத்தத்தை குறைக்கவும், போதைப் பழக்கத்திலிருந்து விடுப்படவும் கலை, இலக்கியம், சாரண பயிற்சி, செஞ்சிலுவை சங்க பயிற்சி, என்எஸ்எஸ் பயிற்சியில் பங்கேற்கச்செய்ய வேண்டும்.


ச.வித்யா பிரியதர்ஷினி, விருதுநகர் மாவட்ட அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்: “செடிக்கு வளர்ச்சி மட்டும் போதாது, மலர்ச்சியும் வேண்டும். அதுபோல் மாணவர்களின் கல்வி வளர்ச்சி மட்டும் போதாது, திறன் வளர்ச்சியும் வேண்டும். மாணவர்கள் திறனை வெளிப்படுத்த களம் அமைத்து தந்து அங்கீகரிக்க வேண்டும். ஆசிரியர்களை, அரசுக்கு புள்ளிவிவரங்கள் தரும் இயந்திரமாக ஆக்காமல் மாணவர்களோடு பாடங்கள் தொடர்பாக கலந்துரையாடும் நேரங்களை அதிகரிக்கச் செய்ய வேண்டும்” என்றார்.


ஓய்வுபெற்ற கல்லூரி முதல்வர் ரா.முரளி: “கல்வியை மாநிலப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் அரசு கட்டணத்தை மீறி வசூலிப்பதை தடுக்க வேண்டும்.”


தன்னார்வலர் அருணா: “தமிழக அரசு சமச்சீர் கல்வி கொண்டுவந்து பல ஆண்டாகிறது. ஆனால், இன்னும் மெட்ரிகுலேஷன் பள்ளி என பெயர் வைக்கின்றனர். எனவே, அந்த பெயர்களை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.”


தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சீனிவாசகன்: "மாநில அரசின் அதிகாரத்தின்கீழ் கல்வியை கொண்டு வர வேண்டும். அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். பாடநூல்களில் தமிழ்த் தாய் வாழ்த்து, தேசிய கீதம் இடம்பெறுவதுபோல், வேற்றுமையில் ஒற்றுமையுடைய நாடு என்ற அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையும் இடம் பெறச்செய்ய வேண்டும்.”


ஓய்வுபெற்ற கணித ஆசிரியர் ஜாக்குலின்: “என்ன கொள்கை வந்தாலும் அதை அமல்படுத்துவது ஆசிரியர்கள்தான். ஆசிரியர்கள் - மாணவர்கள் நட்பு வலுப்பெற நன்னெறி வகுப்புகள் அவசியம் வேண்டும். பாட வகுப்பில் மாணவர்களின் உளவியல் சார்ந்த விஷயங்களை பேசமுடியாது. எனவே, இதுபோன்ற விஷயங்களை பேச நன்னெறி வகுப்புகள் வேண்டும்”

இதுபோன்று பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். முடிவில், மதுரை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கா.கார்த்திகா நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் எல்.ஜவஹர் நேசன், சுல்தான் அஹமத் இஸ்மாயில், ராம சீனுவாசன், அருணா ரத்னம், ஆர்.பாலு, ஜெய் ஸ்ரீ தாமோதரன், அ.கருப்பசாமி ஆகியோர் பங்கேற்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent