இந்த வலைப்பதிவில் தேடு

நீங்கள் இந்த வகைப் பெற்றோரா? உடனடியாக மாறிவிடுங்கள்!

புதன், 21 செப்டம்பர், 2022

 




பள்ளிகள் எப்படி பல வகைப்படுகிறதோ, அதுபோலவே துவக்கப் பள்ளி மாணவர்களும் பல வகைப்படுவர். 


சில துவக்கப் பள்ளி மாணவர்களை பெற்றோர்தான் காலையில் எழுப்புவார்கள். அவர்களை கழிப்பறைக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டி, சீருடை அணிவித்து, காலை உணவை வாயில் திணித்து, காலணியை மாட்டி தயார்படுத்துவார்கள். 


பள்ளி வாகனம் வருவதற்குள், மகனை அல்லது மகளை தயார்படுத்தி, வாசலில் வந்து நிற்கும் வாகனத்தில் ஏற்றி அவர் உட்காருகிறாரா என்று பார்த்து உறுதி செய்துகொண்டுதான் வீடு திரும்புகிறார்கள்.


ஆனால், துவக்கப் பள்ளியில் பயிலும் ஆரம்ப நாள்களில் வேண்டுமானால் பெற்றோர் இதையெல்லாம் செய்துவிடலாம். ஆனால், மெல்ல அவர்கள் இதையெல்லாம் செய்ய பழக்கிக் கொள்ள வேண்டும். பழக்கிக் கொள்ள தகுதிப்பெற்றவர்கள்தான். ஆனால் அதற்கு பெற்றோர் விடுவதில்லை. அனுமதிப்பதில்லை.


அவர்கள் செய்ய கால தாமதம் ஆகும், சரியாக இருக்காது. மீண்டும் அதனை நாம் சரிப்படுத்த வேண்டும். அதற்கு பதிலாக நாமே செய்துவிடலாம் என்று நினைத்து பல ஆண்டுகளுக்கு பெற்றோரோ இவற்றையெல்லாம் செய்து வைப்பார்கள்.


இது இதோடு நின்றுவிடுவிதல்லை. இந்த மோசமான வழக்கம் பழக்கம் அவர்களது வாழ்நாளில் பிற்பகுதிக்கும் தொடரும்போது சிக்கல் உருவாகிறது.


சிறந்த பெற்றோராக இருங்கள்..


இதையெல்லாம் செய்துவைத்தால்தான் சிறந்த பெற்றோர் என்று பலரும் தவறாக கருதுகிறார்கள். மிக சிறு வயதிலிருந்தே, அவர்களதுப் பணிகளை அவர்களைச் செய்ய வைப்பதே சிறந்த பெற்றோரின் பணி, கடமையும் கூட.


தனது வேலைகளை பிள்ளைகள் தாங்களாகவே சிறப்பாக செய்ய பழக்கிவிட்டால் பிற்காலத்திலும் அது அவர்களை ஒரு சிறந்த மகனாக / மகளாக இருக்க உதவும். அதில்லாமல் சிறந்த பெற்றோராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் வேண்டுமானால் சிறந்த பெற்றோருக்கான பட்டத்தை உங்களுக்குக் கொடுத்துக் கொள்ளலாம். ஆனால் உங்கள் பிள்ளைகளுக்கு பட்டம் கிடைக்காது?


சில பெற்றோர் ஒருபடி மேலே சென்று தங்களது குழந்தைகளின் வீட்டுப்பாடங்களைக் கூட எழுதிக் கொடுத்து பிள்ளைகள் நிம்மதியாக இருக்க வழிவகுக்கிறார்களாம்.


இதனால், ஓராண்டு காலத்துக்கும் மேல் இவ்வாறு பெற்றோர் செய்யும் போது, இதையெல்லாம் நாம்தான் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளராமல், தன்னை கவனித்துக் கொள்வதும் வீட்டுப் பாடங்களைச் செய்வதும் பெற்றோரின் கடமை என்று நினைத்து விடுகிறார்கள்.


சரி, நாங்கள் உட்கார்ந்து அவர்களை வீட்டுப் பாடம் எழுத வைக்கவில்லை என்றால் அவர்களது கல்வி பாதிக்காதா என்று கேள்வி எழுப்பும் பெற்றோர் ஒரு விஷயத்தை நிச்சயமாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு குழந்தையை பின்னால் இருந்து தள்ளிக் கொண்டே இருந்தால் அது உங்கள் தள்ளும் வேகத்துக்கு மட்டுமே இயங்கும். ஆனால், அது தன்னைத் தானே உந்தித் தள்ளி முன்னேறக் கற்றுக் கொடுத்துவிட்டால், சுய உந்துதலுடன் அதுவே தனது வாழ்நாளை உந்திச் சென்று ஒரு நல்ல நிலையை அடையும்.


உண்மையிலேயே பிள்ளைகளை அதிகமாக கவனத்துக் கொள்ளும் பெற்றோர் சிறந்த பெற்றோர் இல்லை. என்னக் கொடுமை என்றால் அவர்கள் தங்களை அவ்வாறுதான் நினைத்துக் கொள்கிறார்கள் என்பதுதான்.


அவர்களே செய்ய வேண்டிய வேலைகளை முதலில் பட்டியலிடுங்கள். அவர்களை உங்களது கவனிப்போ கண்காணிப்போ இல்லாமல் அதனை எல்லாம் செய்யவிடுங்கள். அதிலிருக்கும் பிரச்னைகளை அவர்களே சுயமாக கையாள விடுங்கள். அவர்கள் அதனை எப்படி செய்தாலும் அதற்காக அவர்களை குற்றம்சாட்டாமல் அவர்கள் வழியில் சென்று அதனை சரிப்படுத்தும் யோசனையை மட்டும் கொடுக்கலாம்.


உதவி அல்லது பாதுகாக்கிறேன் என்று கூறிக் கொண்டு, அவர்கள் மீது அதிக கவனம் அல்லது காதலை வெளிப்படுத்துகிறேன் என்று கூறி, அவர்களது சொந்த உலகில் நீங்களும் சேர்ந்து வாழ்ந்து அவர்களது வாழ்க்கையையும் நீங்களே வாழ்ந்துவிடாதீர்கள்.


இது மட்டுமல்ல.. சுயமாக சிந்திக்கவும் கருத்துக் கூறவும் அனுமதியுங்கள்.


அவர்களது கல்வி, அவர்கள் செய்யும் வேலை அவர்களது வயதுத் தகுதிக்கு ஏற்பட அவர்களை சுயமாக சிந்திக்கவும், சில விஷயங்களில் கருத்துக் கூறவும் அனுமதிக்கலாம்.


அவர்களது எண்ணங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள அனுமதியுங்கள்.


நம்பிக்கையை அதிகரிக்கும்எந்த ஒரு செயலையும் பிள்ளைகள் செய்தால் அதனை ஊக்கப்படுத்துங்கள். 


எந்தத்  தடையும், நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் வார்த்தையையோ சொல்லி, அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையில் விளையாடிவிட வேண்டாம்


சார்ந்து வாழாமல், சுயசார்புடன் வாழ நீங்கள் வழிவிடுங்கள். 


அது மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் அவர்கள் தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்கலாம். 


சேமிப்புக்கு பணம் கொடுத்துவிட்டு, அதிலிருந்து அவர்களது சிறு சிறு தேவைகளை செய்து கொள்ளச் சொல்லும் போது பெரிய நன்மை கிடைக்கிறது. பணத்தைக் கையாள்வது, தேவையான செலவு, தேவையற்ற செலவு என அவர்களை பகுத்துப்பார்ப்பது, தேவையைக் குறைப்பது போன்ற கலைகள் கைவசமாகும்.


இதற்கு எத்தனை பெற்றோர் தயாராக இருக்கிறீங்கள்?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent