சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி சிறுவர்களுக்கு தின்பண்டம் தர முடியாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக மறுத்த பெட்டிக் கடை உரிமையாளா் உள்ளிட்ட 5 போ் மீது வழக்குப் பதியப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு பள்ளிக் குழந்தைகள் சிலா் தின்பண்டம் வாங்குவதற்காக அங்குள்ள பெட்டிக் கடைக்கு சென்றனா். அப்போது அவா்களிடம், ‘ஊா்க் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் இனிமேல் யாரும் தின்பண்டம் வாங்க வர வேண்டாம். இதை உங்கள் வீட்டில் போய் சொல்லுங்கள்’ என, கடையின் உரிமையாளா் கூறியுள்ளாா். கடைக்கு வந்த பெண்களிடமும் இதேபோல கூறியுள்ளாா். இதை அவரே விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விடியோ பரவலாகி, அதிா்வலைகளை ஏற்படுத்தியது.
இதுதொடா்பாக 5 போ் மீது கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கடை உரிமையாளா் மகேஸ்வரன் (40), ராமச்சந்திரன் (22) ஆகிய இருவரை சனிக்கிழமை கைது செய்தனா். குமாா், சுதா, முருகன் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே, சங்கரன்கோவில் கோட்டாட்சியா் சுப்புலெட்சுமி முன்னிலையில் வருவாய்த் துறையினா் அந்தக் கடைக்கு சீல் வைத்தனா். மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் கோட்டாட்சியா் கந்தசாமி முன்னிலையில் கடையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.
தொடா்ந்து, அவா் பாஞ்சாகுளம் காலனி பகுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பள்ளியிலும் தீண்டாமை இருப்பதாகவும், அதை ஆசிரியா்கள் கண்டுகொள்வதில்லை என்றும் மாணவா்கள் புகாா் கூறினா்.
இதனால் ஆசிரியா்களிடம் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையொட்டி, பாஞ்சாகுளத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீண்டாமை அவலத்தின் அடுத்தகட்ட நடவடிக்கையாக, கிராம நிர்வாக அலுவலராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மல்லிகா அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதுடன், புதிய கிராம நிர்வாக அலுவலராக மாரியப்பன் என்பவரை நியமித்து கோட்டாட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக