இந்த வலைப்பதிவில் தேடு

EWS - உயர் ஜாதியினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு - முழு விவரம்

செவ்வாய், 8 நவம்பர், 2022

 



‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கிய  கூடுதல் 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும்’ என  உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பொருளாதாரத்தில் பின் தங்கிய  உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் கூடுதல் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் கடந்த  2019ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலுடன் அமலில் உள்ளது. இதனை எதிர்த்து, ‘யூத்பார் ஈகுவாலிட்டி’ என்ற அமைப்பு உள்ளிட்ட பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதேபோன்று தமிழகத்தில் திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் இடையீட்டு மனுதாக்கல் செய்திருந்தனர்.


வழக்கை பதிவு செய்த உச்ச நீதிமன்றம்  மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10 சதவீதம் நடப்பு ஆண்டுக்கு மட்டும் என்று நிவாரணம் வழங்கியதோடு, ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு ரூ.8 லட்சம் வருமான அளவுகோல் எப்படி நிர்ணயம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு ஜாதி வாரியான இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படும் நிலையில் இந்த கூடுதல் 10 சதவீத இட ஒதுக்கீடு எப்படி வழங்க முடியும்’ என கேள்வி எழுப்பியிருந்தது.


விசாரணையில், ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா, ‘‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு சின்கா கமிட்டி உத்தரவின் அடிப்படையில் தான் 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு மற்றும் ரூ.8 லட்சம் என்ற வருமான அளவுகோல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால் ஓபிசி இட ஒதுக்கீட்டோடு இதனை ஒப்பிட்டு பார்க்க முடியாது. அதனால் இந்த விவகாரத்தில் குழுவின் பரிந்துரையை முழுமையாக அரசு ஏற்க முடிவு செய்துள்ளது. இருப்பினும் இந்த விவகாரத்தில் ஒருசில மாற்றங்களை கொண்டு வர ஒன்றிய அரசு பரிசீலித்து வருகிறது’’ என தெரிவித்தார்.


 இதையடுத்து மனுதாரரான திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவது என்பது அசாதாரண சூழலில் கொண்டு வரப்பட்டுள்ளது என அரசு கூறுவது என்பது எந்த வகையிலும் நம்பத்தகுந்தது கிடையாது. இது சமத்துவத்திற்கு எதிரானது மட்டுமில்லாமல் சமுதாய தீண்டாமையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளது. இதில் வறுமை என்பது அனைத்து தரப்பிலும் சமமான ஒன்றாக இருக்கும் பொழுது கூடுதல் 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்குவதற்கான அசாதாரண சூழல் என எவ்வாறு வகைப்படுத்த முடியும்.


குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை குறிப்பிட்ட அல்லது தனிப்பட்ட வர்க்கமாக வகைப்படுத்த முடியாது’’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரவீந்தர் பட், திரிவேதி, மற்றும் பரிதிவாலா ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு நேற்று தீர்ப்பு வழங்கியது.


இதில், 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு செல்லும் என நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, பிலா திரிவேதி, பர்திவாலா ஆகியோரும், 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு சட்டவிரோதமானது, செல்லாது என தலைமை நீதிபதி யு.யு.லலித் மற்றும் நீதிபதி ரவீந்தர் பட் ஆகியோரும் தீர்ப்பளித்தனர். இதனால், 5 நீதிபதிகளில் மூன்று நீதிபதிகள்  ஒன்றிய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று பெரும்பான்மையான தீர்ப்பு வழங்கியுள்ளதால், பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு வழங்கப்பட்ட கூடுதல் 10 சதவீத இட ஒதுக்கீட்டு விவகாரத்தில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள அரசாணை சட்டம் செல்லும் என்பது உறுதியாகி உள்ளது.


* பாஜ வரவேற்பு

உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாஜ பொது செயலாளர் பி.எல். சந்தோஷ் கூறுகையில், ‘‘இடஒதுக்கீட்டின் பலன்களை பெறாத பிரிவினருக்காக இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் சமூக நீதி திட்டத்துக்கு  மிக பெரிய உத்வேகம் கிடைத்துள்ளது’’ என்றார். காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உதித்ராஜ் கூறுகையில், ‘‘உச்சநீதிமன்றம் ஜாதிய ரீதியில் செயல்படுகிறது’’ என்றார். அவரது இந்த பேச்சுக்கு பாஜ செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கண்டனம் தெரிவித்தார்.


* 5 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் முழு விவரம்

நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தனது தீர்ப்பில், ‘‘இட ஒதுக்கீடு முறை என்பது சமூக மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியவர்களுக்கானதாக மட்டுமல்லாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வழங்கப்படலாம். இது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை கண்டிப்பாக சிதைக்காது. அதேபோல 50 சதவீத இட ஒதுக்கீடு முறையையும் இது பாதிக்காது. மேலும் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஆகிய பிரிவினர்களுக்கு முன்னதாக இட ஒடுதுக்கீடு வசதி தரப்பட்டௌள்ளது. அதனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கு கூடுதல் 10சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட 103 வது அரசியல் சாசன சட்ட திருத்தம் செல்லும்’’ என தெரிவித்தார்.


நீதிபதி பிலா திரிவேதி, ‘‘பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினர்களுக்கு கூடுதல் 10சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை நியாயமற்ற வகைப்பாடு என கூற முடியாது. இந்த சட்ட திருத்தத்தை கொண்டு வந்தது நாடாளுமன்றத்தின் உறுதியான நடவடிக்கையாக கருதப்பட வேண்டும். பொருளாதரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினரை தனி வகையாக வகைப்படுத்தியது சரியானதே. எனவே 103 வது சட்ட திருத்தத்தை உறுதி செய்கிறேன். மேலும்  நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கக்கூடிய சூழலில் இட ஒதுக்கீடுக்கான நடைமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அது சமூகத்தின் பெரிய நலன்களுக்கானது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களால் இட ஒதுக்கீடு கொள்கைகளுக்காக வகுக்கப்பட்ட கால அவகாசம் 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் முழுமை அடைய முடியவில்லை’’ என்றார்.


நீதிபதி பர்திவாலா, ‘‘இட ஒதுக்கீடு என்பது முடிவற்றதாக இருக்க முடியாது. அப்படி இருந்தால் அது குறிப்பிட்ட ஆதாயத்தை நீண்ட நாட்களுக்கு எதிர்பார்ப்பதாக மாறிவிடும். எனவே நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் திரிவேதி ஆகியோர் வழங்கிய தீர்ப்புடன் நான் ஒத்துப்போகிறான்’’ என தெரிவித்தார். நீதிபதி ரவீந்திர பட், ‘‘இந்தியாவில் நமது அரசியல் சாசன அமைப்பு விதிவிலக்குகளை அனுமதிக்காது. ஆனால் 10சதவீத இட ஒதுக்கீடு முறை என்பது இத்தகைய விதிவிலக்கை உருவாக்குகிறது. இந்த சட்ட திருத்தம் சமூக நீதியின் கட்டமைப்பையும் அதன் அடிப்படைக் கட்டமைப்புகளையும் குறைத்து மதிப்பீடு செய்கிறது.


குறிப்பாக பிரிவு 16 (1), (4) ஆகியவை அனைவருக்குமான சமத்துவ கொள்கையை வலியுறுத்துகிறது. ஆனால் இந்த கூடுதல் இட ஒதுக்கீடு அதனை மீறும் வகையில் இருக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டில் இருந்து பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியில் பின்தங்கியவர்களை விலக்கி வைப்பது என்பது தவறானது. மேலும் இந்த சட்ட திருத்தம் அரசியல் சாசன ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக உள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி ஆகிய பிரிவுகளில் உள்ள ஏழைகளை பொருளாதார ரீதியாக பின் தங்கிய வகுப்பில் இருந்து விலக்கி வைப்பது என்பது அரசியல் சாசனம் தடை செய்த பாகுபாடுகளை நடைமுறைப்படுத்துவதாக உள்ளது.


சமத்துவ குறியீட்டின் இதயத்தின் பகுதியை இந்த விவகாரம் தாக்கும் வகையில் உள்ளது. 50 சதவீத இட ஒதுக்கீட்டின் வரம்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இதுகுறித்து என்ன குறிப்பிடுவது பொருத்தமானதாக இருக்கும் என்றால், தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கான சட்ட திருத்தம் விதிமுறை மீறல் என கருதப்பட்டது. எனவே இந்த தீர்ப்பு அந்த வழக்கின் மீதுள்ள கேள்விகளை எழுப்பும். மேலும் 50 சதவீத இட ஒதுக்கீட்டில் விதிமுறை மீறலை அனுமதிப்பது பிரிவினையை வழிவகுக்கும். குறிப்பாக தமிழகத்தில் உள்ள 69 சதவித இட ஒதுக்கீட்டை வழி மொழியும் வகையில் இந்த கூடுதல் இட ஒதுக்கீடு உள்ளது.


இதில் தனிப்பட்ட மத இட ஒதுக்கீடு என்பது கண்டிப்பாக கூடாது. அதில் எவரேனும் சொந்த மதத்தின் பிரத்யேக வாழ்வு மற்றும் பிறருடைய அழிவு பற்றி கனவு கண்டால், நான் அவருக்கு பரிதாபப்படுகிறேன். இதைத்தைதான் விவேகானந்தரும் தெரிவித்திருள்ளார் என சுட்டிக்காட்டிய அவர்,பொருளாதார அளவுகோலின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவதில் விதிமுறை மீறல் இல்லை. அதே வேளையில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் என்ற பிரிவில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை விளக்கி வைப்பது அடிப்படை கட்டமைப்பை மீறுவதாகும்.


அந்த அடிப்படையில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு கூடுதலாக 10 சதவீதம் வழங்கும் சட்ட திருத்தம் 103 சட்டவிரோதம் ஆகும். அது செல்லத்தக்க ஒன்றும் கிடையாது’’ என தெரிவித்தார். இறுதியாக தலைமை நீதிபதி யு.யு.லலித் வழங்கிய  உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, எம்.திரிவேதி, பரிதிவாலா ஆகியோர் அளித்த தீர்ப்புக்கு நான் ஒப்புதல் வழங்குகிறேன். அதேநேரம் நீதிபதி ரவீந்தர பட் கூறிய தீர்ப்பை நான் ஆதரிக்கிறேன். அதாவது குறிப்பிட்ட ஜாதியினருக்கு மட்டும் கூடுதல் இடஒதுக்கீடு வழங்கும் இந்த சட்டம் அரசியல் சாசன விதிகளுக்கு புறம்பானது’’ என்று தனது கருத்தை தெரிவித்தார்.


* ஓய்வு பெற்றார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு. லலித்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு. லலித் கடந்த ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி பதவியேற்றார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி லலித்தின் பணி காலம் இன்றுடன் நிறைவடைகிறது என்றாலும் இன்று குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு நீதிமன்றம் விடுமுறை என்பதால் நேற்றுடன் பணிகாலம் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நாட்டின் 50 வது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திரசூட் நாளை பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், நேற்று நடந்த பிரிவு உபசார விழாவில் லலித் பேசுகையில்,‘‘கடந்த1986ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வக்கீல் பணியை தொடங்கினேன். உச்சநீதிமன்றத்தின் அறை எண் 1ல் என்னுடைய பயணம் துவங்கியது.எந்த நீதிமன்றத்தில் இருந்து பணி துவங்கியதோ அதே நீதிமன்றத்தில் ஓய்வு பெறுகிறேன்’’ என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent