இந்த வலைப்பதிவில் தேடு

தலைமை ஆசிரியர் 2வது முறையாக கைது

செவ்வாய், 3 ஜனவரி, 2023

 

அரசு பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, தலைமை ஆசிரியர் இரண்டாவது முறையாக, 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உதவிய ஆசிரியரை போலீசார் தேடி வருகின்றனர்.


பள்ளி மாணவியருக்கு, ஆசிரியர்கள் பாலியல் தொல்லை அளிப்பது தொடர்ந்து அதிகரித்து வருவதால், தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.


தலைமறைவு


ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் அருகே சிறுவயல் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட, ராமநாதபுரத்தில் வசிக்கும் ஜூலியஸ் ரவிச்சந்திரன், 56, தலைமை ஆசிரியராக உள்ளார்.


இவர், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் சீண்டல் செய்துள்ளார். இவருக்கு, கொளத்துாரைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் ஜெயபால், 40, உடந்தையாக இருந்தார்.


இருவர் மீதும், நயினார் கோவில் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்தனர். இந்நிலையில், திருநெல்வேலியில் தலைமறைவான தலைமை ஆசிரியர்ஜூலியஸ் ரவிச்சந்திரனை, போலீசார் கைது செய்தனர்.


ராமநாதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, அங்கு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், தலைமறைவான ஜெயபாலை போலீசார் தேடி வருகின்றனர்.


ஜூலியஸ் ரவிச்சந்திரன்இதற்கு முன், 2018ல் திருநெல்வேலியில், போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமினில் வெளிவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


ராமநாதபுரம் முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறியதாவது:


பள்ளி ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்வித்துறை இணை இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்படும்.


இவ்வாறு அவர் கூறினார்.


சமீபகாலமாக, அரசு பள்ளி மாணவியர் தொடர்ந்து ஆசிரியர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவது, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


போக்சோ சட்டத்தில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவர்கள் ஜாமின் பெற்று வெளியே வருகின்றனர். வழக்கு நேரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்படும் காமுக ஆசிரியர்களுக்கு, பின் மீண்டும் பணி வழங்கப்படுகிறது.


கேவலமான புத்தி உடைய அதுபோன்ற ஆசிரியர்கள், திரும்ப திரும்ப அதே தவறை செய்து, அரசு பள்ளிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.


மாணவியரிடம் சில்மிஷத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை, தமிழக அரசு நிரந்தர பணி நீக்கம் செய்து, இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை எடுத்தால் தான், இதுபோன்ற சம்பவங்கள் குறையும். அரசு பள்ளிகளுக்கு மாணவியரை தைரியமாக பெற்றோர் அனுப்பி வைப்பர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent