வியாசர்பாடி தனியார் உயர்நிலைப் பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகளை சரியாக படிக்கவில்லை எனக்கூறி சில்மிஷம் செய்த ஆசிரியரை, போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி மெயின்ரோடு பகுதியில் தனியார் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் மாதவரம் பச்சையப்பன் கார்டன் 1வது தெருவை சேர்ந்த பிரேம்ஆனந்த் (46) ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இங்கு 7ம் வகுப்பு படிக்கும் கொடுங்கையூரை சேர்ந்த 12 வயது சிறுமி, அவளது தோழி என 2 சிறுமிகள், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வீட்டிலிருந்து செல்போனை எடுத்து குழந்தைகள் மைய உதவி எண் 1098க்கு தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால், அந்த எண்ணுக்கு லைன் கிடைக்கவில்லை.
சிறுமிகள் 2 நாட்களாக அந்த எண்ணிற்கு தொடர்ந்து போன் செய்தும் யாரும் எடுத்து பேசவில்லை. இதனையடுத்து, தொடர்ந்து சிறுமிகள் அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளனர். இதை சிறுமியின் தாய் பார்த்து செல்போனில் என்ன செய்கிறீர்கள் என கேட்டுள்ளார். பிறகு செல்போனை வாங்கி பார்த்தபோது குறிப்பிட்ட எண்ணிற்கு சிறுமிகள் தொடர்ந்து போன் செய்தது தெரியவந்தது.
அந்த எண் குறித்து சிறுமியின் தாய் விசாரித்தபோது, ‘எங்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் இந்த எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்’ என்று எங்கள் பள்ளியில் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டு சென்றார்கள். இதனால், நாங்கள் 3 நாட்களாக தொடர்பு கொள்கிறோம். இந்த எண்ணை தொடர்பு கொள்ள முடியவில்லை என சிறுமி மற்றும் அவரது தோழி கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் என்ன நடந்தது என கேட்டுள்ளார். அப்போது, சிறுமி, தாயிடம் பள்ளியில் ஆசிரியர் ஒருவர் படிக்கவில்லை என்றால் ஆங்காங்கே பிடித்து கிள்ளுவதாகவும், கண்டகண்ட இடங்களில் கை வைப்பதாகவும் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, சிறுமியின் தாய் எம்கேபி நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் ஆசிரியர் பிரேம் ஆனந்தை கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்தனர். இன்ஸ்பெக்டர் நசீமா, குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, அவர்களும் காவல் நிலையம் வந்து விசாரணை நடத்தினர்.
அதில், கைது செய்யப்பட்ட ஆசிரியரான பிரேம் ஆனந்த் மதுபோதைக்கு அடிமையானவர் என்பதும், சிறுமிகளிடம் படிக்கவில்லை எனக்கூறி கண்ட கண்ட இடங்களில் கை வைத்து எல்லை மீறியதும், சில்மிஷம் செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் ஆசிரியர் பிரேம் ஆனந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக