மாநகரில் பிரபலமாக இருக்கும் தனியார் பள்ளி ஒன்றின் உதவி ஆசிரியர் பாலா (தனுஷ்). அவரைத் தொலைதூர கிராமம் ஒன்றின் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அனுப்பி வைக்கிறார் பள்ளியின் உரிமையாளர் திருப்பதி(சமுத்திரக்கனி). அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அனுப்பட்ட பாலா, அந்தக் கிராமத்தில் பள்ளியிறுதி வகுப்பை இடை நிறுத்திய 45 மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கிறார்.
மாணவர்கள் அனைவரும் அரசுத் தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுவிட, திருப்பதி (சமுத்திரக்கனி), அதிர்ச்சியடைகிறார். பாலாவை அங்கிருந்து வெளியேற்றாவிட்டால், அரசுப் பள்ளிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும் எனக் கருதும் அவர், பாலாவுக்குப் பலவிதங்களில் தடைகளை ஏற்படுத்துகிறார். அவற்றை பாலா எவ்வாறு எதிர்கொண்டார்? மாணவர்களை அடுத்தக் கட்டதுக்கு அழைத்துச் சென்றாரா இல்லையா என்பது கதை.
இந்திய அளவில் பல மொழிகளில் அடித்துத் துவைக்கப்பட்ட ‘கல்வி வியாபார’க் கதை. இன்று நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட உயர்கல்வி நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதாகக் கூறி, பல தனியார் பள்ளிகள் - பயிற்சி நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது, பயிற்சியை ‘பிராண்ட்’ ஆக நிலைநிறுத்திக்கொள்ளும் கல்விச் சந்தையில் அதிகார வர்க்கத்துடன் கைகோர்த்து அவர்கள் ஆடும் பகடையாட்டம் ஆகியவற்றைப் பட்டவர்த்தனமாகச் சித்தரித்திருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
தற்காலத்தின் முக்கிய பிரச்சினையை, தனியார் மயக் கொள்கை முழு வீச்சில்அமல்படுத்தப்பட்ட 90-களில் நடந்தஒன்றாகச் சித்தரித்துள்ளதில் இயக்குநர் பம்மியிருப்பது தெரிகிறது. அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற, தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு எதிராகமாநில அரசு ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை அமல்படுத்தத் தயாராவதில் படத்தின் மையப் பிரச்சினை தொடங்குகிறது. ஆனால், இதுபோன்ற கல்விக் கட்டண ஒழுங்குமுறை ஆணையங்களைப் பெரும்பாலான தனியார் பள்ளிகள் துரும்புக்கும் மதிப்பதில்லை என்பதையும், கட்டணக் கொள்ளைக்கு எதிராகக் கேள்வி கேட்காமல் நடுத்தர வர்க்கப் பெற்றோர் மவுனமாகக் கடந்து செல்வதைக் குறித்தும் இயக்குநர் வாய் திறக்கவில்லை.
முக்கியப் பிரச்சினையைப் பேசும் ஒரு கதையைத் தேர்ந்தெடுத்தற்காக தனுஷைப் பாராட்டலாம். அதேநேரம், பள்ளி இறுதி வகுப்பு மாணவன் போன்ற தோற்றத்துடன் ஆசிரியராக வருவது, சண்டைக் காட்சிகளில் ‘சூப்பர் ஹீரோ’ போல் மரண மாஸ் காட்டுவது போன்றவை நெருடல். இந்தக் காட்சிப் பிழைகள் அனைத்தையும் தனக்கேயுரிய மிகையற்ற நடிப்பால், வசன உச்சரிப்பில் காட்டும் நேர்த்தியால் தனியொருவராக படத்தைத் தாங்கிப் பிடிக்கிறார் தனுஷ்.
கதாநாயகி சம்யுக்தாவுக்கு உரிய முக்கியத்துவம் அளித்திருக்கிறார்கள். கல்வி வியாபாரியாக வரும் சமுத்திரக்கனி ‘சாட்டை’ படத்தில் ஏற்றிருந்த ஆசிரியர் கதாபாத்திரத்துக்கு நேரெதிராக வந்து, தன் கதாபாத்திரம் மீது கோபம் உருவாகும்அளவுக்கு நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களும் ஜி.வி.பிரகாஷின் இசையும் ஒரு மாஸ் படத்துக்கான தோரணையுடன் ஈர்க்கின்றன.
என்னதான் ஆந்திரா - தமிழ்நாட்டு எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் கதை நடந்தாலும் தெலுங்குப் படத்தைப் பார்ப்பது போல் உணர வைத்திருப்பது பலவீனம். தர்க்கப் பிழைகளும் மலிந்திருக்கும் படத்தின் திரைக்கதைக்கு இன்னும் கொஞ்சம் சுறுசுறுப்பைக் கூட்டியிருந்தால், உண்மையாகவே ‘வாத்தி’ குடும்பங்கள் கொண்டாடும் படமாகியிருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக