ஒரே பள்ளியில் பணியாற்றும், திருமணமான ஆசிரியர்களை இணைத்து சமூக வலைதளத்தில் அவதுாறு பரப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலுார் மாவட்டத்திலுள்ள ஒரு அரசு ஆண்கள் பள்ளியில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியர் ஆகிய இருவரின் போட்டோவை ஒன்றாக இணைத்து, இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளதாக சக ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவிப்பது போன்று வடிவமைக்கப்பட்ட பேனர் ஒன்று சமூக வலைதளத்தில் உலா வருகிறது. சம்பந்தப்பட்ட இரண்டு ஆசிரியர்களுக்கும் திருமணமாகி, பிள்ளைகள் உள்ளனர்.
அந்த பேனரில், தலைமை ஆசிரியர் உட்பட 21 ஆசிரியர்களின் போட்டோக்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பேனரில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்களின் போட்டோக்கள் அனைத்தும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட, 'எமிஸ்' சுயவிபரத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.
ஆசிரியர்களின் 'பாஸ்வேர்டு' தெரிந்தவர்கள் மட்டுமே எமிஸ் சுயவிபரத்தை 'லாகின்' செய்து, போட்டோக்களை பதிவிறக்கம் செய்ய முடியும். இதனால் சம்பந்தப்பட்ட பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களே இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆசிரியர்கள் இரு கோஷ்டிகளாக செயல்படுவதால், ஒரு கோஷ்டியை சேர்ந்தவர்கள் இச்செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தரப்பில் கொடுத்துள்ள புகாரின் பேரில், போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக