குழந்தைகளுக்கு, ஆபத்து காலத்தில் பாதுகாப்பாக இருப்பது பற்றி கற்றுத்தர வேண்டியது முக்கியமானது. குறிப்பாக வீட்டில் மின் சாதனங்கள், சமையல் அடுப்பு பயன்படுத்துதல் மற்றும் பிற வேலைகளின் போது, சில நேரங்களில் தீக்காயங்கள் ஏற்படக்கூடும். அத்தகைய சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதற்கான சில வழிகளை இங்கு பார்ப்போம்.
விழிப்புணர்வு:
மின்சார வயர்களைச் சுற்றி, எளிதில் தீப்பிடிக்கும் பொருட்களை வைத்து விளையாடுவதைத் தவிர்ப்பது குறித்து, தெரியப்படுத்த வேண்டும். வீட்டில் மின் வயர்கள் சரியான முறையில் சீல் வைக்கப்பட்டுள்ளதா? கேஸ் சிலிண்டர் ஒழுங்காக மூடப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். தீ மற்றும் புகை அலாரங்களைப் பொருத்தி வைப்பதும், அவற்றை அவ்வப்போது, சோதனை செய்து, தயார் நிலையில் வைத்திருப்பதும் அவசியம். ஆபத்து காலத்தில், இந்தக் கருவிகள் எழுப்பும் சத்தம் குறித்து குழந்தைகளிடம் தெரிவிக்க வேண்டும். விபத்து ஏற்படுவதற்கு அறிகுறியாக இருக்கும் தீப்பொறிகள், புகை போன்றவை ஏற்பட்டால், அதை உடனடியாகக் கவனிக்கவும்.
அதை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுத் தந்தால், பெரிய தீவிபத்துகளைத் தவிர்க்கலாம். இது குறித்து உடனடியாக வீட்டில் உள்ள பெரியவர்களுக்குத் தெரியப்படுத்தவும் கற்றுத் தரவேண்டும். பாதுகாப்பு விதிமுறைகள்: சமையல் அறையில், சூடான பொருட்களைக் கையாள்வது குறித்து குழந்தைகளுக்கு கற்றுத் தரவேண்டும்.
வளர்ந்த குழந்தைகளுக்கு அடுப்பைப் பற்ற வைத்து அணைப்பது, ஓவன், மின்சார அடுப்பைக் கையாள்வது என அனைத்தையும் கவனமுடன் கற்றுத்தர வேண்டும். திறந்த நிலையில் மின் வயர்கள் இருந்தால், அவற்றில் இருந்து குறைந்தபட்சம் 5 அடி தூரம் தள்ளி இருக்கப் பழக்க வேண்டும்.
வயர்களை ஈரமான கையாலோ, துணியாலோ தொடுவது, ஒரு பிளக்கில் பல உபகரணங்களைப் பொருத்தி சார்ஜ் செய்வது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் பல கருவிகளை சார்ஜ் செய்தால், அவை அதிக சூடாகி, விபத்துக்கு வழிவகுக்கும். தேவையில்லாத சமயங்களில் வயர்களை பிளக்கில் இருந்து எடுப்பது கூடாது. சுவிட்சுகள் சரியாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கவனிப்பதும் அவசியம்.
தப்பிக்கும் வழிமுறைகள்:
வீட்டில், அவசர காலத்தில் வெளியேறும் வழிகளைப் பற்றி குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறையாவது, தீ விபத்தின் போது எப்படிச் செயல்பட வேண்டும் என்று பயிற்சி அளிக்க வேண்டும். தப்பிக்கும் வழித்தடத்தில் குறுக்கீடுகள் இருந்தால் அதை அகற்றிச் சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது, எதிர்பாராத விதமாக, ஆடைகளில் தீப்பிடித்தால், பட்டாசை கீழே போடுவது, தரையில் உருள்வது போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை கற்றுத்தர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக