இந்த வலைப்பதிவில் தேடு

அரசு பள்ளியில் பெஞ்ச், டெஸ்க்குகளை நொறுக்கிய மாணவ,மாணவிகள் சஸ்பெண்ட் - சொந்த செலவில் வாங்கி கொடுக்கவும் உத்தரவு

வியாழன், 9 மார்ச், 2023

 




தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே அமானி மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் அமானிமல்லாபுரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 700 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியில் கடந்த ஒரு வாரமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு நடந்தது. இந்த தேர்வு நேற்று முன்தினத்துடன் முடிந்தது. இந்நிலையில் தேர்வு முடிந்து வீட்டிற்கு செல்லும் முன்பாக, வகுப்பறையில் இருந்த பெஞ்ச், டெஸ்க், மின்விசிறி மற்றும் சுவிட்ச் பாக்ஸ் உள்ளிட்டவற்றை பிளஸ் 2 மாணவ, மாணவிகள் அடித்து உடைத்து நொறுக்கினர். இதனை மாணவர்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.



இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த சம்பவம் குறித்து, தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முத்துசாமி உள்ளிட்ட 25 ஆசிரிய, ஆசிரியைகளிடம், மாணவர்கள் எதற்காக பெஞ்ச், டெஸ்க்குகளை அடித்து உடைத்தனர். இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமை ஆசிரியர் முத்துசாமி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோவிந்தசாமி ஆகியோர், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.



அப்போது, செய்முறை தேர்வு முடிந்த மகிழ்ச்சியில், டேபிள்களை அடித்து நொறுக்கியதாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்களின் பெற்றோரை வரவழைத்து, உடைக்கப்பட்ட பொருட்களை, அவர்களது சொந்த செலவில் வாங்கி தர வேண்டும் எனக்கூறியதோடு, மாணவர்களிடம் இதுபோன்ற ஒழுக்க கேடான செயல்களில் ஈடுபட மாட்டோம் என எழுதி வாங்கியிருப்பதாக தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.


இதனிடையே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன், பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளார். மாணவ, மாணவிகள் எதற்காக பெஞ்ச், டெஸ்க்குகளை உடைக்கின்றனர் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெஞ்ச் டெஸ்க்குகளை அடித்து நொறுக்கிய மாணவ, மாணவிகள் 5நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.



1 கருத்து

 

Popular Posts

Recent