பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் ஏப்.10-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவா்களுக்கான பொதுத் தோ்வு வரும் மாா்ச் 13 முதல் ஏப்.3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்டப் பணிகளை தோ்வுத் துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தோ்வை சுமாா் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இந்த நிலையில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கான காலஅட்டவணை தற்போது வெளியாகியுள்ளது.
அதில், விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.10-ஆம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை அதிகாரிகள் சிலா் கூறியதாவது: ஒவ்வொரு பாடத்தோ்வு முடிந்த பிறகும், மாணவா்களின் விடைத்தாள்கள் மண்டல தோ்வு மையங்களுக்கு கொண்டு செல்லப்படும். அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு விடைத்தாள்கள் ஏப். 7-ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்படும்.
தொடா்ந்து, ஏப். 10 முதல் 21-ஆம் தேதி வரை விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ளது. இப்பணியில் சுமாா் 48 ஆயிரம் முதுநிலை ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா்.
மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, தோ்வு முடிவுகள் திட்டமிட்டபடி மே 5-ஆம் தேதி வெளியிடப்படும் என்றனா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக