இந்த வலைப்பதிவில் தேடு

கலாஷேத்ரா பாலியல் புகார்: 4 பேராசிரியர்கள் பணி நீக்கம்

திங்கள், 3 ஏப்ரல், 2023

 

மாணவிகளின் பாலியல் புகார்களின் தொடர்ச்சியாக ஹரி பத்மன் உள்ளிட்ட 4 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



மத்திய அரசின் கலாச்சாரத் துறையின் கீழ் சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவிகளுக்கு, பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாகப் புகார்கள் எழுந்தன. இதற்கிடையில், புகாருக்கு உள்ளான பேராசிரியர் ஹரி பத்மன், உதவியாளர்கள் சாய்கிருஷ்ணன், சஞ்ஜித் லால், ஸ்ரீநாத் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும், கலாஷேத்ரா கல்லூரி முன்னாள் மாணவி ஒருவர், அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அதில், பேராசிரியர் ஹரி பத்மன் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிவித்திருந்தார். இதையடுத்து, பேராசிரியர் ஹரி பத்மன் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர், ஹரி பத்மனை தனிப்படை காவல் துறையினர் சென்னையில் இன்று (ஏப்.3) கைது செய்தனர்.


இதனைத் தொடர்ந்து, மாணவிகள் புகார் கூறிய 4 பேரையும் கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று கலாஷேத்ரா நிர்வாகத்திற்கு தமிழக மகளிர் ஆணைய தலைவி அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில், மாணவிகள் புகார் கூறிய 4 பேராசிரியர்களை பணி நீக்கம் செய்து கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.



கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் ஆஜர்: இதனிடையே, கலாஷேத்ரா இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் துணை இயக்குநர் ஆகியோர் மாநில மகளிர் ஆணையத்தில் ஆஜராகினர். சேப்பாக்கத்தில் உள்ள மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில் ஆணைய தலைவி குமாரி, இருவரிடமும் பல்வேறு தகவல்களைக் கேட்டறிந்தார்.


இது தொடர்பாக மகளிர் ஆணைய தலைவி குமாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "தேர்வுகள் உள்ளதால் மாணவிகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவிகள் புகார் தெரிவித்த 4 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற மூவரை கல்லூரி வளாகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று அறிவுறுத்தல் வழங்கி உள்ளேன்.


மாணவிகள் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கோரினர். இதன்படி 5-ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெற உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வந்த புகார் குறித்த தகவல்களை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை குழு பற்றி தகவல்களை கேட்டு அறிந்தேன். அதற்கான ஆவணங்கள் அளித்துள்ளார்கள். தற்போது மாணவிகளின் பாதுகாப்பு தான் முக்கியம்" என்று அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent