இந்த வலைப்பதிவில் தேடு

தியேட்டர், அரங்கங்களில் முகக் கவசம் அவசியம் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

திங்கள், 3 ஏப்ரல், 2023

 

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை தற்போது 150-ஐக் கடந்துவிட்டது.



இதையடுத்து, தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கடந்த 1-ம் தேதி முதல் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைகளில் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் முகக் கவசம் அணிகின்றனர்.


இந்நிலையில், தியேட்டர்கள், குளிர்சாதன அரங்கங்களில் இருப்பவர்கள் முகக் கவசம் அணியுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அச்சமடையும் நிலையில் கரோனா தொற்று பரவல் இல்லை. மிதமான வகையில்தான் இருக்கிறது. பெரிய அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனாலும், முன்னெச்சரிக்கையாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



இதையொட்டி, மருத்துவமனைகளில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது தியேட்டர்கள், குளிர்சாதன வசதி கொண்ட அரங்குகள், கலையரங்கங்கள் உட்பட மக்கள் அதிகம் கூடும் அரங்குகளில் அனைவரும் முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.


இதை உத்தரவாகப் பிறப்பிக்காமல், அறிவுறுத்தலாக தெரிவித்துள்ளோம். அதேநேரத்தில், பொதுவெளியில் செல்வோருக்கு அறிவுறுத்தல்கள் ஏதும் வழங்கப்படவில்லை. ஆனாலும், முதியோர், இணை நோயாளிகள், நோய் எதிர்ப்பாற்றல் குறைந்தவர்கள் ஆகியோர் வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிந்துகொள்வது நல்லது. இவ்வாறு செல்வவிநாயகம் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent