இந்த வலைப்பதிவில் தேடு

36 ஆண்டுகளுக்குப் பிறகு ஆசிரியரிடம் அடி வாங்கிய மாணவர்கள்

புதன், 14 ஜூன், 2023

 



நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 1985 - 1987 ஆம் ஆண்டுகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் படித்த மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியில் மீண்டும் ஒருவர் ஒருவரை சந்தித்துக் கொள்ள முடிவெடுத்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.


அதன்படி 36 ஆண்டுகளுக்குப் பின் நேற்று முன்தினம் தங்கள் படித்த பள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.


இவர்களுக்கு தற்போது 60 வயது ஆகிறது. மேலும் இவர்களில் பலர் ஆசிரியர், மருத்துவர், பொறியாளர் மற்றும் காவல்துறை எனப் பல்வேறு பதவிகளில் பணியாற்றி தற்போது ஓய்வு பெற்றிருக்கின்றனர். இன்னும் சிலர் தொழில் அதிபர்களாகவும் உள்ளனர். இந்த சந்திப்பின்போது தங்களுக்கு கற்பித்த 8 ஆசிரியர்களையும் பள்ளிக்கு அழைத்து வந்து பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் சிறப்பித்தனர்.


இந்த சந்திப்பின் ஒரு பகுதியாக முன்னாள் மாணவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து, ஆசிரியரை பாடம் நடத்துமாறு கேட்டுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களும் பாடம் நடத்தினர். அப்போது ஆசிரியர் கையில் குச்சியைக் கொடுத்து நாங்கள் மாணவர்களாக இருந்தபோது அடித்ததைப் போலவே மீண்டும் எங்களை அடிங்க சார் என கையை நீட்டி ஒவ்வொருவராக ஆசிரியரிடம் அடி வாங்கி மகிழ்ந்தனர். 


அதன் பின்னர் முன்னாள் மாணவர்கள், முன்னாள் ஆசிரியர்கள் என அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மேலும் தங்களது பள்ளிக் கால நினைவுகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.


இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர்களின் மகன்கள், மகள்கள், பேரன் மற்றும் பேத்திகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் தங்களது ஆசிரியர்களை காரில் அழைத்துச் சென்று அவர்களது வீட்டில் விட்டுவிட்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி பிரியா விடை கொடுத்துச் சென்றனர். முன்னாள் மாணவர்கள் தங்களது ஆசிரியர்களைப் பள்ளிக்கு அழைத்து சந்தித்து மரியாதை செய்த இந்த சம்பவம் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent