இந்த வலைப்பதிவில் தேடு

நாளும் குவியும் வழக்குகளால் பாழாகும் கல்வி

புதன், 14 ஜூன், 2023

 

நாளும் குவியும் வழக்குகளால் பாழாகும் கல்வி!

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை பரந்து பட்டதாகும். இந்தியாவிலேயே, 1966 இல் பாராளுமன்ற அவையில் முன்வைக்கப்பட்ட கோத்தாரி கல்விக்குழு அறிக்கை காலந்தொட்டு உரிய ஆசிரியர் கல்வித் தகுதிகளுடன் அந்தந்தப் பள்ளிகளில் அதற்கு தக்க ஆசிரியர்களைப் பணியமர்த்தி நிர்வகிக்கும் பொறுப்பு மிக்க மாநிலமாக தமிழ்நாடு தற்போது வரை விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது. அண்மையில் கூட மேற்கு வங்காளத்தில் 30000 க்கும் மேற்பட்ட தகுதியில்லாத ஆசிரியர்கள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்டிருப்பதும் பணிநீக்கம் பரிந்துரைக்கப்பட்டிருப்பதும் ஊடகங்கள் வழி அறிந்த ஒன்றாகும்.


தமிழ்நாடு அரசு நிர்மாணித்துள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் தேவைக்கேற்ப அவ்வப்போது தகுதி வாய்ந்த ஆசிரியர் பெருமக்களுக்குப் பலவகைப்பட்ட போட்டித் தேர்வுகள் நடத்தி வருவது எண்ணத்தக்கது. இவையனைத்தும் எந்தவொரு குற்றச்சாட்டிற்கும் முறைகேட்டிற்கும் ஆளாகாத வண்ணம் தன்னாட்சி அமைப்பாக வெளிப்படைத் தன்மையுடன் திறம்பட இயங்கி வருவது பாராட்டுக்குரியதாகும். 


இடைநிலை ஆசிரியர், தொடக்கப்பள்ளித் தலைமையாசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளிப் பட்டதாரி தலைமையாசிரியர், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர், மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர், நுண்கலை ஆசிரியர், கணினி ஆசிரியர், தொழிற்கல்வி ஆசிரியர் என ஒவ்வொரு வகை ஆசிரியர்களுக்கும் ஒவ்வொரு விதமான அரசால் வரையறுக்கப்பட்ட பொதுக்கல்வி மற்றும் தொழிற்கல்வித் தகுதிகள் கொண்டே பணி நியமனங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இவற்றுள் அனைத்து வகையான தலைமையாசிரியர் பணியிடங்களும் உரிய கல்வித் தகுதிகளுடன் பணிமூப்பு முன்னுரிமை அடிப்படையில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும். 


2009 இல் கொண்டு வரப்பட்ட அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் காரணமாக ஏற்கெனவே மேற்குறிப்பிட்ட புதிய ஆசிரியர் பணி நியமனங்களுக்குரிய போதிய அடிப்படைக் கல்வித் தகுதிகள் நிரம்பியவர்களுக்கு மேலும் ஒரு கூடுதல் சுமையாக முன்மொழியப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் புதிய நியமனங்கள் நியமிக்கப்பட்டு வருவது அறியத்தக்கது. இத்தகுதித் தேர்வுகள் இருவகைப்பட்டதாக அமைந்துள்ளது. இடைநிலை ஆசிரியர் புதிய பணி நியமனத்திற்கு முதல் தாளும் பட்டதாரி ஆசிரியர் புதிய பணி நியமனத்திற்கு இரண்டாம் தாளும் கட்டாயம் எழுதித் தேர்ச்சிப் பெற்றால்தான் வேலை கிடைக்கும் என்ற நிலையில் மேலும் ஒரு கூடுதல் தேர்வுச் சுமையாக இடைநிலை ஆசிரியர்களுக்கு நியமனப் போட்டித் தேர்வு எழுதித் தேர்ச்சிப் பெற வேண்டிய அவலநிலை இன்றுள்ளது. 


இத்தகைய ஓர் ஒழுங்கான அமைப்பு வழிப்பட்ட நிர்வாகத்தில் தம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை முன்னிறுத்தி மாறி வரும் கால மாற்றத்திற்கேற்ப எங்கோ யாருக்கோ அடிப்படைத் தகுதியை இதுவரைக்கும் வரைமுறைப்படுத்தாத அல்லது விரும்பாத நபர்களுக்குப் பிறப்பிக்கப்படும் ஆணையில் உள்ள ஓரிரு சொற்களை, வாக்கியத்தை, பத்தியைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள முனைவதும் முனைப்புக் காட்டுவதும் அதற்காக வழக்குப் போட்டு இழுத்தடிப்பு செய்ய நினைப்பதும் அண்மைக் காலத்தில் கல்வித்துறையில் பெருகி வருவது வேதனைக்குரியது. 


உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் நீதியின் கதவைத் தட்டுவது தவறில்லை. பாதிப்புகளை வேண்டுமென்றே ஏற்படுத்தும் குறுகிய நோக்கில் தம் சொந்த விருப்பத்தை முன்னிறுத்தித் தொட்டவற்றுக்கெல்லாம் நீதிமன்றம் நோக்கி ஓடுவதென்பது ஆபத்தானது. நீண்ட நெடிய காலமாக, யாருக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படுத்தாத, அனைவரும் ஏற்கத்தக்க வகையில் கடைபிடித்து வரும் மாநில அரசின் கல்வித்துறை சார்ந்த பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வுகள் குறித்த கொள்கை முடிவுகளில் கடன் வாங்கி வந்து சம்மட்டி அடிக்க நினைப்பது என்பது நல்லதல்ல. இது பலவிதமான குழப்பங்களையும் குந்தகங்களையும் விளைவிக்க வல்லது.


தற்போதைய புள்ளி விவரங்கள் அடிப்படையில் மேனிலைப்பள்ளிகளில் மட்டும் 680 தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இஃது உயர்நிலை, நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளிலும் நீடித்து வருகிறது. பணி ஓய்வு, பணி மாறுதல், பணியின் போது இறப்பு மற்றும் பணித் துறப்பு போன்றவை காரணமாக தலைமையாசிரியர் காலிப் பணியிடம் உருவாகிறது. இருவேறு தரப்பினரின் நீதிமன்ற வழக்குகளால் மட்டும் பல்வேறு மேனிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் உரிய தலைமையாசிரியர் பதவி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் காலியாக உள்ளது. 


இதனால் என்ன குடிமுழுகவா போகிறது என்றால் ஆம் என்பதே விடையாகும். பள்ளியும் கல்வியும் மாணவர்களின் ஒழுக்கமும் பாழ்பட்டுப் போகிறது! எந்தவொரு நிர்வாகமும் சிறக்க தலைமை அவசியம். பொதுவாகவே மனித மனம் ஒரு தலைமையின் சொல்படி இயங்குவதற்கு கீழ்ப்பட்டதாகவே உள்ளது. இதன் அடிப்படையில் தான் சாதியக் கட்டுமானங்களும் மத வழிபாட்டுச் சடங்கு முறைகளும் பொருளாதார செலவின வழிமுறைகளும் அரசியல் பிம்பக் கட்டமைப்புகளும் தோற்றுவிக்கப்பட்டு தொடர்ந்து வருகின்றன. 


நல்லவரோ கெட்டவரோ ஒரு தலைமை தமக்கு மேலாக இருக்க வேண்டும் அல்லது தாமே ஒரு தலைமைத்துவப் பண்புகள் நிறைந்த ஒருவராக உருமாறி வழிநடத்த விழைவதும் அரங்கேறி வருகிறது.  இதில் குடும்பம் மற்றும் தொழில் நிறுவனங்கள் ஆகியவை விதிவிலக்கல்ல. தம்மை ஏதேனும் ஒரு வழியில் வழிநடத்த ஒவ்வொருவருக்கும் ஒரு மீட்பரும் மேய்ப்பரும் தேவைப்படுகிறார். இதில் பள்ளி மாணவர்கள் தம் பதின்பருவ குழப்பமும் அச்சமும் நிறைந்த காலத்தில் ஒரு நல்ல தலைமையையும் சிறந்த வழிகாட்டியையும் தேடியலைவதும் ஏங்கித் தவிப்பதும் இயற்கை.


இந்த பின்நவீனத்துவ சூழலில் தன்முனைப்பும் தற்சார்பும் மேலோங்க கீழ்ப்படிந்து நடக்கும் நோக்கும் போக்கும் அருகி வரும் நிலையில் பணியில் மூத்த பொறுப்புத் தலைமையாசிரியர் என்பவர் சக ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடையே ஒரு எல்லைக்கு மேல் அதிகாரம் செலுத்தி நல்லதொரு நிர்வாகம் வழங்க முடியாத நிலை உள்ளது. அச்சாணி முறிந்த வண்டியாகத் தாறுமாறாக ஓடிச் சேர வேண்டிய நிலையில் இன்றைக்கு பல பள்ளிகளின் நடப்பு இருக்கிறது.


இந்த இன்மைச் சூழல் பள்ளியின் தரம் மற்றும் நலத்தை வெகுவாக சீர்குலைத்து விடுகிறது. கற்பித்தலும் கற்றலும் ஆளுக்கொரு திசையில் பயணிக்கத் தொடங்கி மாணவரின் அடைவுத் திறன், தேர்ச்சி விகிதம், நல்லொழுக்கம், மாணவர் சேர்க்கை முதலானவற்றில் ஒரு பெரும் சரிவையும் சிக்கலையும் ஏற்படுத்த காரணமாக அமைகிறது என்பது மிகையாகாது. இதனால் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கை மற்றும் நன்மதிப்பு வெகுவாகக் குறையத் தொடங்குகிறது. இந்த கோவம் பள்ளிக்கல்வித் துறை மற்றும் ஆளும் அரசின் மீதும் திரும்பி வீண் கெட்ட பெயர் ஈட்டித் தந்து விடுவதை என்னவென்பது?


அதுபோல், பல்வேறு குற்றவியல் வழக்குகளில் அகப்பட்டு பணியிடை நீக்கம் காரணமாக ஏற்பட்ட காலிப் பணியிடங்களில் மாறுதல், பதிலி நியமனம் உள்ளிட்ட எந்தவொரு பணியும் மேற்கொள்ள இயலாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் கிடந்து வருவதும் கல்வியைத் தொடர்ந்து பாதித்து வருவதும் எளிதாகக் கடந்து விடமுடியாது. இத்தகைய ஆசிரியர் பெருமக்கள் இந்த இடைப்பட்ட காலத்தில் பிழைப்பூதியத்தைத் தம் அடிப்படை உரிமையெனக் கோரிப் பெற்று வாழ்ந்து விடுகின்றனர். தம் மீது சுமத்தப்பட்ட வழக்கையும் சட்டத்தின் துணைக்கொண்டு வேண்டுமென்றே காலம் கடத்துவதைக் காலப்போக்கில் தம் கடமையாகக் கருதுவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளது அறியத்தக்கது. ஏனெனில், கரும்புத் தின்னக் கூலி கொடுத்தால் யாருக்குத்தான் கசக்கும்?


இக்காலக் கட்டத்தில் உண்மையாகவே மிகுந்த கற்றல் பாதிப்பையும் அதனால் விளையும் மதிப்பெண் குறைவுப் பேரிடரையும் எதிர்கொள்வது அனைத்தும் ஒன்றுமறியாத அப்பாவி மாணவர்கள் தாம். யார் யாரோ நிகழ்த்தும் பாவச் சுமைகளை அரசுப் பள்ளியைப் புகலிடமாக நம்பி வந்த ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மாணவர்கள்தாம் சுமக்க வேண்டியுள்ளது. இஃது ஆழ்கடலுக்குள் அமிழ்ந்து கிடக்கும் பனிக்கட்டி போல் உறைந்து வெளித் தெரியாமல் இருப்பது அனைவரும் உணரத்தக்கதாகும். 


இதில் மற்றுமொரு கொடுமை யாதெனில், தாம் நிரபராதி என்று காலம் பல கடந்து மீளும் ஆசிரியர்கள் பணியிடை நீக்கக் காலம் உள்ளிட்ட அனைத்துப் பணிக்காலத்தையும் முறையான பணிக்காலமாக அறிவிக்கச் செய்து ஆணை பெற்று இடைப்பட்ட காலம் அனைத்திற்கும் விடுபட்ட ஒட்டுமொத்த ஊதியத்தையும் ஒரே தவணையாக இலட்சக்கணக்கில் வாங்கி விடுவர். இக்காலத்தில் கட்டாயம் செய்திருக்க வேண்டிய கற்பித்தல் பணிக்கும் அதனால் பள்ளி நிர்வாகத்திற்கு ஏற்பட்ட இழப்பிற்கும் அதனூடாக மாணவர்கள் தொடர்ச்சியாக அடைந்த துயரத்திற்கும் பெற்றோர்களின் மன வேதனைக்கும் பொறுப்பேற்பது யார்? இதற்கு இதுவரை மாற்று வழியில்லை. 


ஏதோ ஒன்றைக் காரணம் காட்டி வழக்குகளைத் தேக்கி வைக்க இயலும். மாணவர்களை அவ்வாறு தக்க வைக்கத்தான் முடியுமா? இந்த மனித ஆக்கப் பேரிடருக்குப் பதில் சொல்ல வேண்டியது அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும். தமக்குப் பாடம் கற்றுக் கொடுக்காத, வழக்குப் போடுவதையே வேலையாகக் கொண்ட, பள்ளிக்கே வாராமல் பிழைப்பூதியம் அல்லது மாத ஊதியம் பெறும் ஆசிரியர்கள் மீது மாணவர்களும் அவர்தம் பெற்றோர்களும் வழக்குப் போட்டால் நிலைமை என்னவாகும்? 


முழுமையாகத் தம் தரப்பில் நியாயம் இருந்தபோதிலும், வழக்குகளால் கல்வி பாழாகுவதை ஒருபோதும் மனிதச் சமூகம் ஏற்க முடியாது. வாதி, பிரதிவாதிகளுக்கு இடையில் அகப்பட்டுச் சீரழிவதாகப் பள்ளிப் பிள்ளைகளின் எதிர்காலம் அமைவது சமுதாயத்திற்கு என்றும் நல்லதல்ல. இந்த குரலற்றவர்களின் குரல் ஓங்கி ஒலிக்க வேண்டியது அவரச அவசியமாகும். ஏனெனில், கல்வி சார்ந்த வழக்கு மேல் வழக்குகள் இங்கே இமயமலை அளவில் பள்ளிக் குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்தை எதிர்கொண்டு மறைத்தவாறு குவிந்துக் கிடைக்கின்றன. 


இத்தகையக் கல்வி சார்ந்த பிரச்சினைகள் மற்றும் உடனடி நிரந்தர தீர்வுகள் ஆகியவற்றிற்கு தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், கல்வித்துறைச் செயலாளர், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கொண்ட உயர்மட்ட குழு அமைத்து அதன் தலைவராக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கல்வி மேலாண்மை மற்றும் ஒழுங்காற்றுக் குறைதீர் ஆணையம் (Educational Management and Disciplinary Grievances Authority) ஒன்றை விரைந்து உருவாக்கி, தக்க வழிகாட்டு நெறிமுறைகள் ஒருமித்து வகுப்பது இன்றியமையாதது. 


இதன் மூலம் தேவையற்ற கால விரயத்தை நிச்சயமாகத் தவிர்க்க இயலும். குறைந்த கால அளவுகளை அளவுகோலாகக் கொண்டு விரைந்து ஆசிரியர் குறைதீர் நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகள் இதனால் விளையும் என்பது திண்ணம். நீதியும் நியாயமும் காலத்தில் நிலைநாட்டப்படும் என்பதால் அடிப்படை ஆதாரமற்றவற்றை வழக்குகளாக ஆக்கும் முயற்சிகள் இதனால் பெருமளவு குறையும். கல்வியும் புரையோடி நாள்பட்டுப் பாழ்பட்டு அழிவதும் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு மாணவர் நலம் காக்கப்படும் என்பது அசைக்க முடியாத உண்மையாகும்.


எழுத்தாளர் மணி கணேசன் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent