கோடைக்கால பாரம்பரிய உணவுகளின் தொடர்ச்சியாக இயற்கை தந்த அடுத்த கொடை நுங்கு ஆகும். பனைமரத்தில் இருந்து கிடைக்கும் கோடைக்கு ஏற்ற மற்றொரு உணவு பதநீர் ஆகும்.
கோடைக்கால பாரம்பரிய உணவுகளின் தொடர்ச்சியாக இயற்கை தந்த அடுத்த கொடை நுங்கு ஆகும். நுங்கினை மேற்தோலுடன் உண்ண கழிச்சல் நீங்கும். நுங்கில் இருக்கும் நீரினை கோடைக்காலத்தில் தோன்றும் வேர்க்குருவின் மீது தடவி வரலாம். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
இதில் நீர்சத்துடன் வைட்டமின் பி, வைட்டமின் சி, இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், தையாமின், ரிபோப்ளேவின் போன்ற உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் உள்ளன. எனவே நுங்கானது கோடைக்காலத்தில் உடலில் நீர்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, மலச்சிக்கல், சருமவறட்சி போன்றவற்றில் இருந்து பாதுகாப்பு தருகிறது.
நுங்கில் இருந்து நுங்கு சர்பத், நுங்கு பாயாசம், நுங்குடன் ரோஜா குல்கந்து சேர்த்த ரோஸ்மில்க் போன்ற உணவு வகைகளாகச் செய்து உண்ணும் பொழுது குழந்தைகளும் விரும்பி உண்பர்.
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் கோடைக்கு ஏற்ற மற்றொரு உணவு பதநீர் ஆகும். தென்னை மற்றும் பனை மரங்களின் பூம்பாளைகளில் இருந்து பெறப்படும் பானம் ஆகும். இதனை சேகரிக்கும் குடுவையில் சிறிதளவு சுண்ணாம்பு பூசப்பட்டு பதநீர் சேகரிக்கப்படுகிறது.
இதில் சோடியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, காப்பர், இரும்புச்சத்து, அமினோ அமிலங்கள் போன்றவை உள்ளன. சுண்ணாம்பு சேர்ந்த குடுவையில் சேமிக்கப்படுவதால் இதில் கால்சியம் சத்து உள்ளது. எனவே பதநீரானது உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு வயிற்றுப் புண்ணை ஆற்றுதல், எலும்புகளுக்கு வலிமை, சிறுநீர் எரிச்சலை தடுத்தல் போன்ற நன்மைகளைத் தருகிறது.
பதநீர் சேர்த்து ஆப்பம், கஞ்சி போன்ற உணவு வகைகளையும் செய்யலாம். இந்த பதநீரை முறைப்படி காய்ச்சியே பனங்கற்கண்டு மற்றும் பனைவெல்லம் (கருப்பட்டி) பெறப்படுகிறது.
பனங்கற்கண்டானது அம்மையின் வெப்பம், நீர்ச்சுருக்கு, தாகம் இவற்றை நீக்கும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. மேலும் பனை வெல்லத்தால் வயிற்றுப் புண், நாவில் சுவையின்மை நீங்கும் எனவும் கூறுகின்றன. இவற்றில் இரும்புச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை உள்ளன. இவை இரண்டும் தயாரிக்கும் முறையில் மட்டுமே வேறுபடுகின்றன.
பனைவெல்லம் அச்சுகளில் ஊற்றி பெறப்படுகிறது. பனங்கற்கண்டு தட்டுகளில் ஊற்றி கிளறி சிறுசிறு துண்டுகளாகப் பெறப்படுகிறது . கோடைக்கேற்ற அனைத்து பானங்களிலும் இவற்றை சேர்த்துப் பருகலாம். ரத்தம் மற்றும் கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் அன்றாடம் இதனை சோகையை போக்கும் மருந்தாக பயன்படுத்தலாம். எனவே வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக ஊட்டச்சத்து மிக்க பனங்கற்கண்டு, பனைவெல்லம் இவற்றை பயன்படுத்தலாம்.
அடுத்ததாக, கோடைக்கு ஏற்ற உணவுப் பொருள் இளநீர் ஆகும். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரக் கூடியது. சிறிதளவு சிறுநீரைப் பெருக்கும் தன்மை உடையது. தாகத்தினை தணிக்கும். இதில் சோடியம், பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் பி, வைட்டமின் சி. சிறிதளவு இரும்புச்சத்து, பாஸ்பரஸ் ஜிங்க் போன்ற துளி சத்துக்கள் உள்ளன. இது உடலில் நீர்ச்சத்து இழப்பு ஏற்படுவதை தடுப்பதோடு, மலச்சிக்கல் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
உடலுக்குப் புத்துணர்ச்சி தருகிறது. உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை சிறுநீர் மூலம் வெளியேற்றுகிறது. சிறுநீரக கற்கள் ஏற்படாமல் தடுக்கிறது. இதனை மற்ற பழச்சாறுகளில் கலந்தும் உண்ணலாம். கோடைக்கு ஏற்ற அற்புதமான பானம் இளநீர் ஆகும். தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் மற்றொரு அற்புதமான உணவுப் பொருள் தேங்காய். இதன் பாலானது கோடைக்கு ஏற்ற ஒரு உணவுப் பொருள் ஆகும். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தகும். சிறுநீரைப் பெருக்கும்.
வாய்ப்புண்ணை நீக்கும் என சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. தேங்காய் பாலில் கால்சியம், பொட்டாசியம், மெக்னிசியம், கொழுப்புச்சத்து, நீர்ச்சத்து போன்றவை உள்ளன. இது உடல் சோர்வை நீக்குகின்றது. உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் தேங்காய் பாலில் உள்ளன. எனவே இருதயத்திற்கும் பாதுகாப்பானது. மலச்சிக்கலை நீக்குகிறது. நம் வீடுகளில் பெரும்பாலான உணவுகளில் தேங்காய் பால் சேருகிறது. இதனை அளவுடன் எடுத்துக்கொண்டால் உடலுக்கு நன்மையையேத் தரும்.
மேலும் தேய்காய் பாலில் உள்ள லாரிக் அமிலம், மேனோலாரின் என்னும் அமிலமாக உடலில் மாற்றப்படுகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை சீராக செயல்படச் செய்கிறது.
கோடைக்கு ஏற்ற மூலிகைகளில் ஒன்று கற்றாழை ஆகும். சித்த மருத்துவத்தில் கற்றாழை பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. இது உடல்வெப்பத்தை தணிப்பதோடு, மூலம், மலச்சிக்கல், சிறுநீர் பாதை எரிச்சல் போன்றவற்றை நீக்குகின்றது. இதன் சதைப்பகுதி தலைக்குத் தேய்க்கும் எண்ணெய்களில் உடல் குளிர்ச்சிக்காக சேர்க்கப்படுகிறது.
மேலும் கீழே விழுந்து அடிபடுவதால் உண்டாகும் வீக்கங்களுக்கு கற்றாழைச் சாறுடன் மஞ்சள் சேர்த்துப் பூசலாம். கற்றாழையின் சதைப்பகுதியை அரைத்து பூசிவர சரும வறட்சி நீங்கும். சருமம் பொலிவு பெறும், வேர்க்குரு, வேனல் கட்டி போன்ற கோடைக்கால சரும பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும்.
கற்றாழையில் போலிக் அமிலம், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, செலீனியம், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், ஜிங்க், ஆந்ரோகுயினோன் போன்றவை உள்ளன. கற்றாழையின் சதைப்பகுதியை ஏழுமுறை வரை நன்றாகத் தண்ணீரில் கழுவிய பின்னரே உபயோகிக்க வேண்டும். இதனோடு மோர், இஞ்சி, உப்பு, சீரகத் தூள் சேர்த்து பருகலாம்.
கற்றாழையை வற்றலாக காய வைத்து நீரில் ஊறவைத்தோ அல்லது ஊறுகாயாக செய்து உண்ணலாம். உடல் சூட்டை தணிப்பதோடு பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகளையும் நீக்குகிறது.
கோடையின் வெப்பத்தை தணிக்கும் அடுத்த மூலிகை நாட்டு ரோஜா அல்லது பன்னீர் ரோஜா ஆகும். இது இனிப்புடன் கூடிய துவர்ப்புச் சுவை உடையது. இது உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதிலிருந்து குல்கந்து, ஊறல் நீர், மணப்பாகு போன்றவை தயாரிக்கப்படுகின்றது. ரோஜாவின் உலர்ந்த பூவிதழ்களை வெந்நீரில் 12 மணி நேரம் ஊறவைத்து பின்னர் வடிகட்டி அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பாகு போல தயார் செய்து தேவைக்கு ஏற்ப தண்ணீரில் கலந்து பருகலாம். இதனால் உடல் சூடு நீங்குவதோடு, வயிற்றுப்புண், வெள்ளைப்படுதல் போன்றவை குணமாகும்.
ரோஜா இதழ்களை இரவில் நீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் அருந்தி வரலாம். ரோஜா இதழ்களில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, கால்சியம் போன்றவை உள்ளன. இவை உடலுக்குப் புத்து ணர்ச்சியைத் தரக் கூடியவை. மேலும் ரோஜா இதழோடு தேன் மற்றும் கற்கண்டு சேர்த்து செய்யப்படும். குல்கந்து குடல் புண்ணை நீக்குவதோடு இதன் ஆன்டிஆக்சிடென்ட் தன்மையால் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது. எனவே ரோஜா இதழ்கள் கோடைக்கு ஏற்ற ஒரு அற்புத உணவுப் பொருள் ஆகும்.
இதைப்போலவே செம்பருத்தி இதழையும் பயன்படுத்தலாம். நன்னாரி ஒருவித கொடி. இதன் வேர் இனிப்புடன் சிறு கசப்புச் சுவை உடையது. நன்னாரி வேரினை இடித்து வெந்நீரில் ஊறவைத்து வடிகட்டி அதனுடன் பனை வெல்லம் சேர்த்து பாகுபோல் காய்ச்சி தேவைக்கு ஏற்ப நீரில் கலந்து பருகலாம். இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு, சிறுநீர் எரிச்சலை நீக்கும். இவை தவிர கீரை வகைகளில் கொடிபசலை, பருப்புக் கீரை, பாற்சொரிக் கீரை, பொன்னாங்கண்ணி, மணத்தக்காளி, வெந்தயக் கீரை போன்றவை கோடைக்காலத்திற்கு ஏற்றவை. கொடி பசலை கீரை தாகத்தையும், உடல் சூட்டினையும் தணிக்கும்.
இதன் இலைச்சாறுடன் கற்கண்டு சேர்த்து அருந்திவர குழந்தைகளுக்கு ஏற்படும் சிறுநீர் கடுப்பு நீங்கும் என சித்த மருத்துவ நூல்கள் கூறுகின்றன. பருப்புக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு குடலுக்கு நன்மையைச் செய்யும். மேலும் பருப்புக்கீரையை அரைத்து வேர்குரு, அக்கி இவைகளுக்குப் பூசலாம். பொன்னாங்கண்ணி குளிர்ச்சியை தரும் கீரை வகை. சித்த மருத்துவத்தில் கண்நோய்க்காக தயாரிக்கப்படும் குளியல் எண்ணெய்களில் பொன்னாங்கண்ணி சேருகிறது.
இதைப் போலவே மணத்தக்காளி கீரை உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு நாக்கு புண் மற்றும் வயிற்றுப் புண்ணிற்கு மருந்தாகும். வெந்தயத்தின் விதை மற்றும் கீரை இரண்டுமே கோடைக்கு ஏற்ற உணவு ஆகும். இதில் நார்ச்சத்துடன் இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம் போன்றவையும் உள்ளன.
வெந்தயத்தை கஞ்சியாகவோ, களியாகவோ, மோருடன் கலந்தோ அல்லது வெந்தய கீரையை சப்பாத்தியுடன் சேர்த்தோ உண்ணலாம். இதனால் கோடையினால் ஏற்படும் உடல்வெப்பம் தணிவதோடு உடலுக்கும் ஊட்டம் தரும் உணவாகும். அடுத்ததாக கோடைக்கு ஏற்ற மற்றொரு உணவுப் பொருள் பாதாம் பிசின் ஆகும். இதில் புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்புச் சத்துடன், பொட்டாசியம், கால்சியம், சோடியம், இரும்பு, மெக்னிசியம் போன்றவையும் உள்ளன. பாதாம் பிசினை இரவில் ஊறவைத்து காலையில் அதனை தண்ணீருடனோ, பாலுடனோ கலந்து உண்ணலாம்.
இது உடலுக்கு குளிர்ச்சியைத் தருவதோடு நெஞ்சு எரிச்சல், வயிற்றுப்புண், சிறுநீர் எரிச்சல், வெள்ளைபடுதல், ஆண்களில் காணப்படும் மலட்டுத் தன்மை போன்றனவற்றிற்கு மருந்ததாகப் பயன்படுகிறது. இவை தவிர நம் அன்றாட உணவில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கக் கூடிய சின்ன வெங்காயம் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதைப் போலவே வெள்ளை வெங்காயமும் கோடைக்கு ஏற்ற உணவு பொருளாகும். இதில் வைட்டமின்-சி, பிளேவனாய்டுகள், குரோமியம், சல்பர் போன்றவை உள்ளன.
இவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக செயல்பட உதவுகின்றன. இருதயத்தை பாதுகாக்கின்றன. செரிமானத்தை எளிதாக்குகின்றன. எனவே உணவில் வெள்ளை வெங்காயத்தினை சேர்த்துக்கொள்வது உடல் நலனை மேம்படுத்தும்.
மேலும் தர்பூசணி, ஆரஞ்சு, சாத்துக்குடி, முலாம் பழம், திராட்சை, எலுமிச்சை, மாதுளை போன்ற பழவகைகளும் தக்காளி, பீர்க்கன் காய், சுரைக்காய், பூசணிக்காய், பச்சைபயறு, வெண்டைக்காய் போன்றவற்றை கோடைகாலத்தில் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. இவை உடலுக்கு குளிர்ச்சி தருவதோடு கோடையில் ஏற்படும் பல நோய்கள் ஏற்படாதவாறு பாதுகாக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக