இந்த வலைப்பதிவில் தேடு

சிறந்த தமிழ் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும்: கல்வியாளர்கள் கருத்து

திங்கள், 22 மே, 2023

 




மாணவர்களுக்கு தமிழை சிறப்பாக கற்றுக்கொடுக்க செம்மொழி கல்லூரிகளை தொடங்கி, சிறந்த தமிழ் ஆசிரியர்களை உருவாக்க வேண்டும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. 


அனைத்து பாடங்களிலும் இரட்டை இலக்கத்திலும், 3 இலக்கத்திலும் 100க்கு 100 மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவிகள் தமிழ் மொழியில் மட்டும் மிகவும் குறைந்த அளவாக ஒற்றை இலக்க மாணவர்கள் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், 12ம் வகுப்பில் 2 பேரும், 11ம் வகுப்பில் 9 பேரும் மட்டுமே தமிழில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் ஒருவர் கூட கிடையாது. 


இது பல தமிழ் ஆர்வலர்கள் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. மாணவர்களுக்கு பிற பாடங்களில் உள்ள ஆர்வம் தமிழ் மொழியில் மட்டும் ஏன் இல்லை என்ற கேள்வி பலர் மனதிலும் எழுந்துள்ளது. படிப்பு முடிந்து வேலைக்கு செல்லும்போது சரளமான ஆங்கிலம் மட்டுமே தேவைப்படுகிறது என மாணவர்கள் பலரும் கூறுகின்றனர். பல மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும் தாய்மொழி கல்விக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 


அதேபோல்தான் நம் தமிழ்நாடும் தாழ்மொழிக் கல்வியை ஊக்குவித்து வருகிறது. தமிழ் மொழியில் பொறியியல், மருத்துவ பாடப் புத்தகங்கள் தமிழில் நடைமுறைப்படுத்துதல், நான் முதல்வன் திட்டம் என அனைத்திலும் தமிழக அரசு தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருந்த போதிலும் மாணவர்களுக்கு தமிழ் மொழி மீதான ஆர்வம் குறைவாகவே உள்ளது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


வேலைவாய்ப்பு கிடைக்காது என்ற பயம்: வேலை வாய்ப்புகளுக்கு ஆங்கில மொழி மட்டுமே தேவைப்படுகிறது. தமிழ் படித்தால் அதிக வேலைவாய்ப்புகள் இல்லை என்ற பயம், எதிர்கால சந்ததிகள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. இதற்கு தனியார் பள்ளிகளும் ஒரு காரணம். 


தங்கள் பிள்ளைகள் தமிழ் வழிக்கல்வியை படிப்பதை கவுரவக்குறைவாக நினைக்கும் பெற்றோர்களும் ஒரு காரணம். தமிழை பிழை இல்லாமல் எழுதவும், வாசிக்கவும் தெரியாத மாணவர்கள் இன்றைக்கு அதிக அளவில் உள்ளனர். கிராமப்புற மாணவர்களுடன் ஒப்பிடுகையில், நகர்ப்புற மாணவர்கள் தமிழில் நான்கு வரியை சேர்த்து படிக்க முடியாமல் தினறுகின்றனர். ஏனென்றால் நகர்ப்புறங்களில் உள்ள தனியார் பள்ளிகளில் தமிழ் பாடங்களை எடுப்பதே குறைவு. 


தமிழ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு மட்டுமே மாணவர்களை தயார் செய்கின்றனர். ஒரு ஆசிரியரின் கற்பிக்கும் முறைதான் மாணவர்களுக்கு அந்த பாடத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும். ஆனால் இன்று தமிழ் மொழியை சிறந்த முறையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் காணமல் போய் விட்டனர். 


சிறந்த தமிழ் ஆசிரியர்கள்: 90களில் பயின்று வெளியே வந்து தற்போது முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பலரும் தமிழ் வழிக்கல்வி பயின்றவர்களே. அப்போது பள்ளிகளில் தமிழ் வகுப்பு வந்தாலே மாணவ, மாணவிகள் உற்சாகமாக மாறி விடுவார்கள். ஏனென்றால் ரசனை கொண்ட இலக்கியங்களையும், அர்த்தம் மிகுந்த இலக்கணங்களையும், சிறந்த காதல் படைப்புகளையும், வரலாற்று கதைகளையும் கொண்டது தமிழ் மொழி மட்டுமே.


இறை வாழ்த்து, உரைநடை என ஒவ்வொன்றையும் தமிழ் ஆசிரியர்கள் தங்கள் பாவனையில் சிறப்பாக நடத்துவார்கள். இலக்கணங்கள் புரியாத மாணவர்களுக்கு கூட எளிதில் புரியும் வகையில் சொல்லி கொடுத்து தமிழில் அவர்களை சிறந்த படைப்பளியாக மாற்றிய ஆசிரியர்கள் பலர் உள்ளனர். 


ஆனால் இன்று இருக்கும் மாணவர்களுக்கு அலகீட்டு வாய்ப்பாடு என்றால் என்னவென்றும், நேர்+நேர்= தேமா என்றும் கூட தெரிவதில்லை. அந்த அளவுக்கு தமிழை கற்பிக்கும் ஆசிரியர்கள் குறந்து விட்டனர். 


தமிழில் பேசினால் அபராதம்: கல்வியாளர் ராஜராஜன் கூறுகையில், ‘‘செம்மொழி வளர்ச்சி அடைய வேண்டிய மொழி அல்ல. அது அதீத வளர்ச்சி அடைந்த மொழி. ஆனால், அது மாணவர்கள் மத்தியில் சென்று சேர்வதில் தடை உள்ளது. தமிழ் மொழியை பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என பல தமிழ் ஆர்வலர்கள் கூறினாலும், அதற்கான முயற்சியை மேற்கொள்வதில்லை. 


பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தமிழில் படித்தால் கவுரவ குறைவாகவும், வீட்டில் தமிழில் பேசினால் இதற்காகவா உன்னை மெட்ரிக்குலேஷன் பள்ளியில் படிக்க வைத்தோம், என கேள்வி கேட்கின்றனர். இந்த நிலை மாற வேண்டும். தமிழில் பேசினால் பல தனியார் பள்ளிகளில் அபராதம் விதிக்கின்றனர். ஆழமான தமிழ் வகுப்புகள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருக்க வேண்டும்’’ என்றார்.


சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற சிறந்த நூல்களுக்கான பரிசு வழங்கும் விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் கலந்துகொண்டு பேசுகையில்,‘‘கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழில் தேர்ச்சி பெறவில்லை. 


சமீபத்தில் வெளியான இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்விலும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமிழ் மொழி தேர்வை எழுதவே வரவில்லை. இதற்கு பெற்றோர் மற்றும் மாணவர்களை மட்டும் குறை சொல்லக்கூடாது. இதில் தமிழ் ஆசிரியர்களுக்கும் பெரும் பங்கு இருக்கிறது. மாணவர்களுக்கு தமிழ் மொழியின் மீது உள்ள ஆர்வத்தை ஆசிரியர்கள் மேம்படுத்த வேண்டும். 


தமிழ் என்றால் இனிமை, அமுது என்று எளிமைப்படுத்தி மாணவர்களுக்கு ஏற்ற வகையில் சொல்லி கொடுத்தால் தாய் மொழி தமிழில் நிச்சயம் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். இதற்கு ஆசிரியர்களை முதலில் தயார்படுத்த வேண்டும். அவர்களுக்கு செம்மொழி கல்லூரி அமைத்து தனி பயிற்சி கொடுக்க வேண்டும். 


அந்த தமிழ் பயிற்சியில் வெற்றி பெறுபவர்களையே தமிழ் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். இதற்காக தமிழகத்தை சென்னை, கோவை, நெல்லை அல்லது மதுரை, திருச்சி என்று 4 மண்டலங்களாக பிரித்து ஒரு மண்டலத்துக்கு ஒரு செம்மொழி கல்லூரி உருவாக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent