இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளிக்கு வந்தவர்கள் மீண்டும் தனியார் பள்ளிகளுக்கு படையெடுப்பு!

ஞாயிறு, 25 ஜூன், 2023

 


கரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் இருந்து விடுவித்துக் கொண்டு அரசுப் பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.


அவர்கள் வந்த வேகத்திலேயே தனியார் பள்ளியை நோக்கி திரும்பிக் கொண்டிருப்பதால் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கவலை அடைந்து வருகின்றனர்.


குழந்தைகளின் எதிர்காலத்திற்கு நல்வழி காட்டும் வல்லமை பெற்றது கல்விச் செல்வம் என்பதை உணர்ந்த பெற்றோர், குழந்தைகளை பள்ளிக் கூடத்தில் சேர்க்கின்றனர். தொடக்கக் கல்வி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் பள்ளியை தேர்ந்தெடுப்பதில் கண்ணும் கருத்துமாக உள்ளனர். பெற்றோரின் எதிர்பார்ப்பை அரசுப் பள்ளிகள் பூர்த்தி செய்ய வேண்டும்.


அவ்வாறு இல்லையெனில் அரசுப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறுவதோடு அரசின் நோக்கமும் சீர்குலையும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கேற்றார்போல் இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருவதாகவும், கடந்த ஆண்டு சேர்ந்த மாணவர்கள் சொல்லாமல் கொள்ளாமல் மீண்டும் தனியார் பள்ளிக்கே திரும்பி விட்டதாகவும் ஆதங்கப்படுகின்றனர் அரசுத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள்.



கள்ளக்குறிச்சி மாவட்டம் வாழவந்தான்குப்பம் தொடக்கப் பள்ளியில் கடந்த ஆண்டு 52 மாணவர்கள் பயின்ற நிலையில், இந்த ஆண்டு 27 மாணவர்களை மட்டுமே அவர்களால் தக்கவைத்துக் கொள்ள முடிந்துள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலும் இதே நிலை தான் உள்ளது.


இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத ஆசிரியர் ஒருவர் கூறுகையில், “அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் குறித்து விளக்கி, வீடு வீடாக சென்று மாணவர்களை சேர்த்து வருகிறோம். ஆனாலும் ஓரிரு ஆண்டுகளில் அவர்கள் தனியார் பள்ளியை நோக்கிச் செல்வது தொடர்கிறது. அரசுப் பள்ளிகளை நாடி வரும் மாணவர்களை தக்கவைக்க வேண்டிய கடமை ஆசிரியர்களுக்கு மட்டும் இருந்தால் போதாது. அரசுக்கும் இருக்க வேண்டும்.


போதிய பராமரிப்பின்மையால் இடிந்து விழும் நிலையில் உள்ள மேற்கூரை, போதிய காற்றோட்ட வசதி இல்லாதது, வெளிச்சம் மற்றும் இருக்கைகள் இல்லாத வகுப்பறை, விளையாட்டு மைதானம், தேவைக்கும் அதிகமான கழிப்பறைகள் இருந்தும் அவை பராமரிப்பின்றி மூடிக் கிடக்கும் அவலம் போன்றவை முக்கியக் காரணிகளாக அமைகின்றன” என்கிறார்.


நோட்டுப் புத்தகம், புத்தகப்பை, காலணி, சீருடை உள்ளிட்ட 17 வகையான பொருட்களை அரசு இலவசமாக வழங்கியும், தமிழ் வழியில் படித்தால் டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு, உயர்கல்வி பயிலும்மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000என்ற சலுகைகளை அறிவித்தபோதிலும், தனியார் பள்ளியை நோக்கி பெற்றோர் நகர்வதற்கு முக்கியக் காரணம், அரசுப் பள்ளிகளின் சூழல் தான்.



அவை மாற்றப்பட வேண்டும். சில இடங்களில் ஆசிரியர்கள் முயற்சியால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கரோனாபெருந்தொற்று, அரசுப் பள்ளிகளுக்கு சிறந்த ஒரு வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் அதை தமிழக பள்ளிக் கல்வித்துறை தவறவிட்டுள்ளது என்பதே ஆசிரியர்களின் கருத்தாக உள்ளது.


இது தொடர்பாக அரசுப் பள்ளிகள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் க.திருப்பதி கூறுகையில், “ஏழைகளின் அறிவுக் கூடமாய் விளங்கும் அரசுப் பள்ளிகளில் பல குறைகள் இருக்கலாம். அவை களையப்பட வேண்டியவை தான். கல்வி அமைப்பில் மாற்றம் வேண்டும் என்பதையும் யாரும் மறுக்கவில்லை. அரசுப்பள்ளிகளின் மதிப்பை தாழ்த்தும்படியான வகையில் நியாயமற்ற கருத்துகளை பொத்தாம் பொதுவாக கூறுவது ஏற்புடையதல்ல. அரசுப் பள்ளிகள் மூலம்தான் தமிழகத்தில் இதுவரையில் 5 கோடிக்கும் மேலானோர் கட்டணமில்லாமல் எழுத்தறிவு பெற்றுள்ளனர் என்பதை பெற்றோர் உணர வேண்டும்.


குடியரசுத் தலைவர், தலைமை நீதிபதி, சந்திராயன் திட்ட இயக்குநர் போன்ற சிகரங்களைத் தொட்ட தமிழர்கள் பலர் அரசுப் பள்ளியில் தாய்மொழி வழியில் படித்தவர்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது. எனவே, இருக்கின்ற குறைகளை களைய உதவுவதே ஆக்கப்பூர்வமான பணியாக இருக்க முடியும். அரசுப் பள்ளிகள் ஜனநாயக பயிர்களை வளர்த்தெடுக்கும் நாற்றங்கால்கள் என்பதை புரிந்துகொண்டு செயல்படுவோம்” என்றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent