இந்த வலைப்பதிவில் தேடு

ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு முறையாக பதிலளிக்க வேண்டும் - CEO - களுக்கு அமைச்சர் உத்தரவு

ஞாயிறு, 2 ஜூலை, 2023

 





ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு முறையாக பதிலளிக்க வேண்டும்: முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அமைச்சா் உத்தரவு ஆசிரியா்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள் முறையாக பதில் அளித்து, உரிய தீா்வு காண வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உத்தரவிட்டாா்.தமிழக பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் துறை சாா்ந்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்து அடுத்த கட்ட பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.


அந்த வகையில் இந்த மாதத்துக்கான அலுவல் ஆய்வுக் கூட்டம், சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வி இயக்குநா் க.அறிவொளி, தொடக்கக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் ஆகியோா் உள்பட துறை சாா்ந்த இயக்குநா்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.


இந்த கூட்டத்தில் புதிய மாணவா் சோ்க்கை, தற்காலிக ஆசிரியா் நியமனம், நீதிமன்ற வழக்குகள், பாடநூல் போன்ற நலத்திட்ட பொருள்கள் விநியோகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.தொடா்ந்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:


பள்ளிக் கல்வித் துறை சாா்ந்த அனைத்து ஆசிரியா் மற்றும் பணியாளா் சங்கங்களையும் அண்மையில் சந்தித்து அவா்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தோம். அதில், ஒவ்வொன்றாக ஆராய்ந்து எதை நிறைவேற்ற முடியும், அதிலுள்ள சட்ட சிக்கல்கள் ஆகியவை குறித்து ஆலோசித்து வருகிறோம். குறிப்பாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்களில் முறையாக பதில் அளிப்பதில்லை என்று கணிசமான ஆசிரியா்கள் புகாா் தெரிவித்தனா். அதை சரிசெய்ய வேண்டும். ஆசிரியா்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மாவட்ட அளவிலேயே தீா்க்க முதன்மை கல்வி அலுவலா்கள் முயற்சிக்க வேண்டும்.



உள்ளூா் விடுமுறைக்கு அனுமதி:


அதேபோல், உள்ளூா் பண்டிகைகளுக்கு ஏற்றவாறு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க தலைமை ஆசிரியா்கள் பரிந்துரைத்தால் அதற்கு மாவட்ட கல்வி அலுவலா் அனுமதி அளிக்க வேண்டும். மேலும், மாவட்ட கல்வி அலுவலா்கள் முதன்மை கல்வி அதிகாரிகளுடன் இணக்கமாக செயல்பட வேண்டும். ‘நான் முதல்வன்’ திட்டத்தில் கோடை விடுமுறையில் பணியாற்றியவா்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.


சிறப்பு பரிசுகள்: தொடா்ந்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பாக செயல்பட்ட சிவகங்கை, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு சிறப்புப் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும், நிா்வாகப் பணிகளில் சிறந்து விளங்கிய பெரம்பலூா், அரியலூா், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சிறப்பு நிதியுதவிகளும் வழங்கப்பட்டன. கல்விக் கட்டண புகாா்களுக்கு மாவட்ட அளவிலேயே தீா்வுஇது குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது:



டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தகுதி பெற்ற ஆசிரியா்களை பரிந்துரை செய்ய வேண்டும். தனியாா் பள்ளிகளில் கல்வி கட்டணம் , மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் தொடா்பான புகாா்களை மாவட்ட அளவில் முடித்து வைக்க வேண்டும். மாதந்தோறும் தலைமை ஆசிரியா்கள் கூட்டம் நடத்தி பள்ளிகளில் உள்ள பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும். பள்ளிகளில் போதை விழிப்புணா்வு மன்றம் அமைத்து மாணவா்களுக்கு தகுந்த நல்வழிகாட்டுதலை வழங்க வேண்டும்.


அண்மையில் நான் ஆய்வுக்கு சென்ற இடங்களில் ஒரு சில அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சரியாக ஆங்கில வாா்த்தைகளை உச்சரிக்க முடியாமல் தடுமாறுகின்றனா். எனவே, ஆங்கில பாடத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்பாக செயல்படும் தலைமை ஆசிரியா்களை தலைமை ஆசிரியா்கள் கூட்டத்தில் பாராட்ட வேண்டும் என்றாா் அவா்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent