இந்த வலைப்பதிவில் தேடு

பள்ளிக்கு வராத 14 ஆயிரம் மாணவர்கள் எங்கே? தேடிப் பிடிக்க முடியாமல் தவிக்கும் தலைமையாசிரியர்கள்

வெள்ளி, 25 ஆகஸ்ட், 2023

 



மதுரையில் பள்ளிக்கு வராமல் இடைநின்ற 14 ஆயிரம் மாணவர்களை, 'எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்க பாருங்கள்' என, தலைமையாசிரியர்களுக்கு கல்வித்துறை கறார் உத்தரவிட்டுள்ளதால், 'இல்லாத மாணவர்களை எங்கே போய் தேடுவோம்' என, புலம்பித் தவிக்கின்றனர் தலைமை ஆசிரியர்கள்.


கல்வித்துறை சார்பில் செப்., 1, 2ல் அனைத்து மாவட்ட சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள் ஆய்வுக் கூட்டம் சென்னையில் நடக்கிறது. இதுதொடர்பாக அனைத்து அரசு, உதவிபெறும் உயர், மேல் நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கூட்டம் 'கூகுள் மீட்'டில் சி.இ.ஓ., கார்த்திகா தலைமையில் நடந்தது.


டி.இ.ஓ.,க்கள் முத்துலட்சுமி, சாய் சுப்புலட்சுமி, உதவித் திட்ட அலுவலர் கார்மேகம், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் கந்தசாமி, செந்தில்குமார் பங்கேற்றனர். மாவட்டத்தில் 2 - 12ம் வகுப்பு வரை 15 நாட்களுக்கு மேல் 14 ஆயிரம் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் அவர்கள் இடைநிற்றல் மாணவர்களாக கருதப்படுகின்றனர். இவர்களை விரைவில் தேடி கண்டுபிடித்து தலைமையாசிரியர்கள் பள்ளியில் சேர்க்க வேண்டும்.


இலவச திட்டங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் 'எமிஸ்'ல் பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்வழி படித்த மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழை பள்ளியில் வழங்கக்கூடாது. சேவை மையம் மூலம் வழங்க தேவையான 'ஆன்லைன்' அனுமதியை தலைமையாசிரியர் நிலுவையின்றி வழங்கியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.


தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களை தேடி கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. மாணவர்கள் முகவரியில் தேடி சென்றால் அவர்கள் வெளி மாவட்டங்களுக்கு வேலைக்கு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.


பல குடும்பங்களில் மாணவர் வருவாய் முக்கிய தேவையாக உள்ளதால் பெற்றோரே அனுப்ப மறுக்கின்றனர். சில குடும்பங்கள் வெளியூறுக்கு குடியேறிவிட்டன. இப்படியிருக்கும் போது அவர்களை எப்படி கண்டுபிடிப்பது என தெரியவில்லை. பள்ளியில் சேர்ப்பது குறித்து பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், என்றனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent