திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 33 மாணவர்களுக்குத் திடீரென உடலில் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மின்னூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் சுமார் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று மாணவர்கள் பள்ளியில் இருக்கும் போது ஒருவர் பின் ஒருவராகத் தனக்கு உடலில் திடீரென ஒவ்வாமை போன்று காயங்கள் ஏற்படுவதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அருகே உள்ள மின்னூர் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்ட 33 மாணவர்களை அனுப்பி வைத்துள்ளனர். மேலும் ஆசிரியர் ஒருவரும் அதேபோன்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். அதில் 5 மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக ஆம்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர், மருத்துவரிடம் இது குறித்து விசாரித்து வருகிறார். காற்று அல்லது உணவின் மூலம் உடலில் இந்த காயங்கள் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மாணவர்களின் ரத்த மாதிரிகளை மருத்துவர்கள் சோதனை செய்து வருகின்றனர். ஆய்வுக்குப் பிறகே எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டது என்று தெரியவரும் எனக் கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக