உத்தரப்பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர், முஸ்லிம் சிறுவனை மற்ற மத மாணவர்களைக் கொண்டு அடிக்க வைத்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உத்தரப்பிதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் மன்சூர்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குப்பாபூர் கிராமத்தில் உள்ளது நேஹா பப்ளிக் பள்ளி. இங்கு 2-ம் வகுப்பில் படிக்கும் முஸ்லிம் மாணவர் ஒருவரை மாற்று மதத்தை சேர்ந்த மாணவர்களை அழைத்து அடிக்குமாறு ஆசிரியை துருப்தி தியாகி கூறியுள்ளார். இது தொடர்பாக வெளியான வீடியோவில், பள்ளி ஆசிரியை ஒரு சிறுவனை வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களைக் கொண்டு அடிப்பதை பார்க்க முடிகிறது. மற்ற மாணவர்களால் அறையப்படும் சிறுவன் முஸ்லிம் என்று கூறப்படுகிறது.
அந்த 7 வயது மாணவரால் சரியாக பாடம் வாசிக்க முடியவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியை சக மாணவர்களைக் கொண்டு அவரை அடித்தார். இது மட்டுமின்றி மாணவனின் மதம் குறித்தும் ஆசிரியர் கருத்து தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை அடுத்து முசாபர்நகர் காவல்துறை, ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த 34 வினாடி வீடியோவுக்குப் பிறகு, நாடு முழுவதும் இருந்து எதிர்வினைகள் வரத் தொடங்கின. இதற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சிங், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் சமூக அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
ஆசிரியை கொடுத்த விளக்கம்
இந்த சம்பவம் குறித்து ஆசிரியை த்ரபதி தியாகி கூறும்போது," நான் ஒரு மாற்றுத்திறனாளி. என்னால் எழுந்து செல்ல முடியாது. அதனால், சரியாக பாடம் படிக்காத மாணவனை சக மாணவர்களை விட்டு தண்டித்தேன். இதனை வீடியோ எடுத்து திரித்து என் மீது பழி சுமத்துகிறார்கள்" என்றார்.
அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக