பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனம் தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசித்து பதில் தரவேண்டும் என்று பள்ளி கல்வி துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆர்.சக்திவேல் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
பட்டதாரி ஆசிரியர் நேரடி பணி நியமனத்துக்கு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று கடந்த 2020 ஜனவரி 30ம் ேததி பள்ளி கல்வித்துறை அரசாணை பிறப்பித்தது.
தகுதி தேர்வில் தேர்வாகி அனைத்து கல்வி தகுதிகளையும் பெற்ற எனக்கு தமிழ்நாடு அரசின் 2012ம் ஆண்டு அரசாணையின் அடிப்படையில் கடந்த 2013ல் சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. இந்த நிலையில், நேரடி நியமன அரசாணையில் மாற்றம் செய்து 2014ல் அரசு ஆணை பிறப்பித்தது.
அதன் பிறகு நேரடி ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை. இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி ெசய்தது. மேலும், 2014 அரசாணையை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம் இந்த தேர்வு தகுதி தேர்வா அல்லது போட்டி தேர்வா என்று அரசுக்கு கேள்வி எழுப்பியது. அரசு பல அரசாணைகளை பிறப்பித்து வருவதால் கடந்த 10 ஆண்டுகளாக நேரடி ஆசிரியர் தேர்வு நடைபெறவில்லை.
புதுச்சேரியில் ஆசிரியர் தகுதி தேர்வு வெயிட்டேஜ் மதிப்பெண்கள், பதிவு மூப்பு வெயிட்டேஜ் மதிப்பெண்களின் அடிப்படையில் ஆசிரியர் தேர்வை நடத்திவருகிறது. எனவே, புதிதாக கொண்டுவரப்பட்ட அரசாணை 149ன்படி நியமனம் செய்யாமல் தகுதியுள்ளவர்களை நேரடி நியமனம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் என்.கவிதா ராமேஷ்வர் ஆஜராகி, அரசின் தொடர் அரசாணைகளால் கடந்த 10 ஆண்டுகளாக தகுதியுடன் காத்திருப்பவர்களுக்கு பணி நியமனம் கிடைக்காத நிலை உள்ளது. இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்களை தேர்வு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, 2018க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றார். அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் சிலம்பண்ணன் ஆஜராகி, போட்டி தேர்வின் அடிப்படையிலும், தகுதி தேர்வின் அடிப்படையிலும் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ெதரிவித்தார்.
இதை கேட்ட நீதிபதிகள், தகுதி ேதர்வா? போட்டி தேர்வா? என்று கேள்வி எழுப்பினர். அப்போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பள்ளி கல்வி துறை செயலாளர் காக்கர்லா உஷா, வழக்குகள் தொடரப்படுவதால் ஆசிரியர் பணி நியமனம் செய்யப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கவிதா ராமேஷ்வர், பள்ளிகளில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்றும் நடவடிக்கைகளிலும் அரசு இறங்கியுள்ளது. அரசு சரியான கொள்கை முடிவை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அரசு இந்த விஷயத்தில் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை செப். 12ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக