இந்த வலைப்பதிவில் தேடு

மாணவர்களிடையே வன்முறை - நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைப்பு

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2023

 



பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகள் வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவன் மற்றும் அவன் குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியது.


இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டவுடன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவர் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். 


பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அந்த மாணவனின் உயர்கல்வி செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்கால தமிழ்நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல.


இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்னை என்பதால், இதில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்கிட ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். 


இந்த குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகை துறையினர் என பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் கருத்துக்களை பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்திடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


* அதிர்ச்சியில் இறந்த கிருஷ்ணன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: நாங்குநேரி வட்டம் மற்றும் கிராமத்தை சேர்ந்த அம்பிகா என்பவரது மகன் சின்னத்துரை மற்றும் மகள் சந்திரா செல்வி ஆகிய இருவரும் கடந்த 9ம் தேதி அரிவாளால் தாக்கப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த அவர்களது உறவினர் கிருஷ்ணன் (59) அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். 


உயிரிழந்த கிருஷ்ணன் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ரூ.3 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent