இந்த வலைப்பதிவில் தேடு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கணித பாடத்தில சேர ஆர்வம் காட்டாத மாணவர்கள்

வெள்ளி, 18 ஆகஸ்ட், 2023

 

தமிழக அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டில் கணித பாடத்தில சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என பேராசிரியரகள் தெரிவித்துள்ளனர்.


தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குனருகத்தின் கீழ் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 11,300 இடங்கள் உள்ளன. நடப்பாண்டில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்தன. இதில் தகுதியான மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூன் மாதம் வரை நடைபெற்றது. ஆனால், கல்லூரிகளில் காலியிடங்கள் இன்னும் உள்ளன. இந்த இடங்களை நேரடி சேர்க்கும் மூலம் நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இந்த கல்லூரிகளில் நிரம்பாமல் காலியாக உள்ள கல்லூரி வாரியான பாடப்பிரிவுளின் விவரங்களை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆங்கிலம், தமிழ், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், பொருளாதாரம், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு சில கல்லூரிகளில் குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் நிரம்பி காணப்படும் நிலையில், பெரும்பாலன கல்லூரிகளில் கணித பாடம் நிரம்பாமல் காலியாகவே உள்ளது.


இதில் 100க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் கணித பாடத்திற்கு மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது. சுமார் 1,500 மேற்பட்ட இடங்கள் நிரம்பாமல் காலியாக உள்ளது. 


சேலம் மாவட்டத்தை பொருத்தவரை ஆத்தூரில் 37, மேட்டூரில் 29, எடப்பாடி 26, சேலம் 4 மற்றும் சேலம் பெண்கள் கல்லூரியில் 2 என மொத்தமாக 98 இடங்கள் காலியாக உள்ளது. அதேபோல், தமிழகத்தில் அதிகபட்சமாக செய்யூர் அரசு கல்லூரியில் 141, வேப்பூர் பெண்கள் கல்லூரியில் 104, ஒரத்தநாடு கல்லூரியில் 94, அரியலூர் கல்லூரியில் 79 உள்ளிட்ட பல கல்லூரிகளில் 50க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன.


குறிப்பாக நடப்பு கல்வி ஆண்டில் கணித பாடப்பிரிவுகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அரசு கல்லூரி கணித பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: கரோனா தொற்று பாதிப்பின் காரணமாக, மாணவர்கள் கல்வி கற்பது குறைந்துவிட்டது. ஒவ்வொரு பாடத்திலும், குறைந்தபட்சமாக பாஸ் வந்தால் போதும் என இருந்து விட்டனர். 


இதனால் கணித பாடத்தில் பெரும்பாலானோர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றனர். பள்ளியில் கணிதம் ஒரு பாடமாக மட்டுமே இருந்தது. கல்லூரியில் அதனை பிரித்துப் படிக்க வேண்டும். கல்லூரியில் சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் கணித பாடத்தை பார்த்து பயப்படுகின்றனர். இதனால் நடப்பு கல்வி ஆண்டில் கணித பாடப்பிரிவின் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாகவே உள்ளது.


பள்ளிகளில் கணித ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்கள் முழுமையாக கற்றுக் கொள்ள முடியவில்லை. உயர்நிலை வகுப்புக்கு வரும்போது, அடிப்படை கணிதத்தை தெரியாமல் சிரமப்படுகின்றனர். 


ஆசிரியர்கள் கணித பாடத்தை கற்றுக் கொடுக்கும் ஆர்வம் இருந்தும் மாணவர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை. இதனால் மாணவர்கள் உயர் வகுப்புகளில் தேர்ச்சி பெற்றால் போதுமே என்ற எண்ணத்துடன் பள்ளிப்படிப்பை முடித்து விடுகின்றனர்.


இதையடுத்து கல்லூரிக்கு வரும் மாணவர்கள் கணிதத்தின் மீது இருக்கும் பயத்தால் கணித பாடத்தை தேர்வு செய்யாமல் ஆங்கிலம், கணினி அறிவியல் பாடத்தை அதிகமாக விரும்பி தேர்வு செய்கின்றனர். ஒரு சில மாணவர்கள் பொறியியல் கல்லூரி தேர்வு செய்து செல்லும்போது அதில் உள்ள கஷ்டத்தை அறிந்து பாதியில் விட்டு விடுகின்றனர். 


இவர்கள் மீண்டும் கலை அறிவியல் கல்லூரிக்கு திரும்ப வரும் மாணவர்கள் கணிதத்தின் மீது இருந்த பயத்தின் காரணமாக கணித பாடத்தை தவிர்த்து வேறு சில பாடப்பிரிவினை தேர்வு செய்கின்றனர்.


கணித பாடம் மிகவும் எளிதான ஒன்று. இதனை பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கணித பாடத்தை படிப்பதன் மூலம் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது அரசுத்துறைகளில் கணித பாடத்திற்கான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடைக்கின்றன. ஐடி, ஆசிரியர் என தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. 


இதனை புரிந்து கொண்டால் மாணவர்கள் எளிதில் வெற்றி பெற முடியும். கணிதப் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை என அந்தப் பாடத்தை கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டு வேறு பாடத்தை இணைப்பதனால் ஒரு பயனும் இல்லை. மாணவர்கள் இடையே இருக்கும் அச்சத்தை நீக்க வேண்டும்" என்றார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent