இந்த வலைப்பதிவில் தேடு

கோரிக்கை அட்டை அணிந்து பணிக்கு சென்ற ஆசிரியர்கள்

வியாழன், 7 செப்டம்பர், 2023

 

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்று பணிக்குச் சென்றனர்.


இது தொடர்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறியதாவது: கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதிக்கு பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் ரூ.5,200 என்னும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது. முன்னதாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியம் வழங்கப்படுகிறது.


பணி, கல்வித்தகுதி என அனைத்தும் ஒரே விதமாக இருந்தபோதும் ஒரே ஊதியம் வழங்கப்படுவதில்லை. எனவே, சம வேலைக்கு சம ஊதியம் என்னும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு அமைக்கப்பட்ட 3 நபர் குழுவின் அறிக்கையை அரசுக்கு விரைந்து வழங்க வலியுறுத்தி, நடத்தப்பட்ட எங்களது செயற்குழு கூட்டத்தில் 3 தீர்மானங்களை நிறைவேற்றினோம்.


முதல் தீர்மானத்தின்படி, ஆக.13-ம் தேதி வெற்றிகரமாக சென்னையில் மாநாடு நடத்தப்பட்டது. இரண்டாம் தீர்மானத்தின்படி, ஆசிரியர் தினமான நேற்றைய தினம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிக்குச் சென்றனர்.


வரும் 27-ம் தேதி வரை பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் இவ்வாறே பணிக்குச் செல்லவுள்ளனர். இதன் பின்னரும் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் செப்.28-ம் தேதி முதல் பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம். எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent