-''வரும் ஆண்டுகளில், தேசிய கல்வி கொள்கை பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்,'' என, கவர்னர் ரவி கூறினார்.
சென்னை, கிண்டி கவர்னர் மாளிகையில், 'எண்ணித் துணிக' பகுதியின் 9வது கலந்துரையாடல் நிகழ்ச்சி, நேற்று நடந்தது. இதில், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பங்கேற்றனர். தேசிய, மாநில அளவில் நல்லாசிரியர் விருதுகள் பெற்ற 24 பேருக்கு, பரிசுகள் வழங்கி, கவர்னர் கவுரவித்தார்.
பின், அவர் பேசியதாவது:
சிறு வயதில் மாணவனாக இருக்கும் போது, என் ஆசிரியர் குளிப்பதற்கு, கிணற்றில் தண்ணீர் இறைத்து கொடுப்பேன். ஆசிரியர், மாணவர்கள் இடையேயான உறவு அற்புதமானது. ஆசிரியர் உறங்கும் போது, அவரது கால்களை நீவி விடுவேன்; அவர்களை குரு என்று அழைத்தோம்.
அதுதான் நம் பண்பாடு. மாணவர்களின் பெற்றோரோ, பாதுகாவலர்களோ யாரும் அவர்களிடம் கேள்வி கேட்கவே முடியாது. ஆனால், தற்போதைய நிலை மோசமாகவே மாறியிருக்கிறது. ஆசிரியர்களுக்கு பெற்றோரும், பாதுகாவலர்களும் நெருக்கடி தருகின்றனர். ஆசிரியர்கள், மாணவர்கள் இடையேயான உறவு இணக்கமானதாக இல்லை.
'ஜி- - 20' மாநாட்டுக்கு, இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது. 2047ம் ஆண்டில், உலகில் தலைசிறந்த நாடாகவும், உலகிற்கு வழிகாட்டும் நாடாகவும், இந்தியா மாறும். உலகளவில் நாம் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில், 3வது நாடாக, பொருளாதாரத்தில், 5வது நாடாக உள்ளோம்.
நாட்டில் புதிய தொழில் வளர்ச்சி அதிகமாகி உள்ளது. ஒவ்வொரு குழந்தையும் தேசிய சொத்துக்கள். ஆசிரியர் பணியில், ஆண்களை விட பெண்கள் அதிகம் உள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கவர்னர் அளித்த பதில்:
செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களால் சுயமாக யோசிக்க முடியாது. இதனால், ஆசிரியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இயந்திரங்கள், கருவிகள் எப்போதும் மனிதர்களுக்கு நிகராக இருக்க முடியாது.
மாணவர் -- ஆசிரியர் இடைவெளி, 20 ஆண்டுகளாக உள்ளது. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை, போட்டிக்காக தயார் செய்யும் மன நிலையிலேயே உள்ளனர். பெற்றோர், ஆசிரியர்களை நம்புவது கிடையாது.
முன்னர் ஆசிரியர்கள், குழந்தைகளை தண்டித்தனர்; அவர்களை நல்வழிப்படுத்தினர். ஆனால், தற்போது மாணவர்களை தண்டிக்க, சட்டத்தில் கூட இடம் கிடையாது.
ஆசிரியர்கள், மாணவர்களை தண்டிப்பது, அவர்களின் நல்லதுக்கு தான் என்பதை, பெற்றோர் புரிந்து கொள்ளும் சூழல் தற்போது இல்லை. இதில், வரும் காலத்தில், தேசிய கல்விக் கொள்கை மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
இவ்வாறு கவர்னர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக