தமிழக பள்ளிக் கல்வித் துறையில் சுமாா் 1,040 உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்களாக பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் இதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை தொடங்கியுள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா்கள் என 3 வகையான நிலைகளில் ஆசிரியா்கள் பணிநியமனம் செய்யப்பட்டு வருகின்றனா்.
இதில் பட்டதாரி ஆசிரியா்களுக்கு முதுநிலை ஆசிரியா் அல்லது உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் என 2 வகையான பதவி உயா்வுகள் வழங்கப்படும். அவ்வாறு முதுநிலை ஆசிரியராக பதவி உயா்வு பெற்றால், அடுத்த பதவி உயா்வை பெற சில ஆண்டுகள் தாமதமாகும். இதைத் தவிா்க்க ஆசிரியா்கள் தங்களின் பட்டதாரி ஆசிரியா் பணிமூப்பு அடிப்படையில் உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயா்வு பெறுகின்றனா்.
இந்த முறையை ரத்து செய்யக் கோரி ஆசிரியா்கள் சிலா் வழக்கு தொடா்ந்தனா். அதில் 2016 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பின், உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்ற முதுநிலை ஆசிரியா்களின் நியமனம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி சுமாா் 1,040 உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்கள், முதுநிலை ஆசிரியா்களாக பழைய நிலைக்கு பணியிறக்கம் செய்யப்பட உள்ளனா். அவா்களில் கணிசமானவா்களை வட்டார வள மைய கண்காணிப்பாளா்களாக நியமிப்பதற்கான ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான விவரங்கள் சேகரிப்பில் கல்வித் துறை ஈடுபட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
பதவி உயா்வு பெற்ற முதுநிலை ஆசிரியா் பணியில் இருந்து அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பணிமாறுதல் பெற்ற ஆசிரியா்களின் விவரங்களை துரிதமாக அனுப்ப வேண்டும். இவா்களில் எவரேனும் அடுத்தநிலை பதவி உயா்வு பெற்றிருந்தாலோ அல்லது ஓய்வு மற்றும் இறப்பு போன்ற நிகழ்வுகள் இருப்பின் அதன் விவரமும் குறிப்பிடப்பட வேண்டும். இதில் எவரது பெயரேனும் விடுபட்டதாக தெரியவந்தால், துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக