தமிழகத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் நியமிக்கப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 2017 முதல் சம்பளம் வழங்காததை கண்டித்து சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத உதவிபெறும் பள்ளிகள் உரிமை மீட்பு குழு பொதுச் செயலாளர் கனராஜ் தெரிவித்தார்.
மதுரையில் இக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் ஜான்கென்னடி தலைமையில் நடந்தது. நிதிக்காப்பாளர் செபாஸ்டியன், மாவட்ட தலைவர் தனபால், உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர், ஆசிரியர் அல்லாத அலுவலர் கூட்டமைப்பு தலைவர் அமலராஜன், கவுரவ தலைவர் கணபதி, பொருளாளர் தயாளன் முன்னிலை வகித்தனர்.பொதுச் செயலாளர் கனகராஜ் கூறியதாவது:மாநிலத்தில் 8400 க்கும் மேற்பட்ட சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத உதவி பெறும் பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளில் முறையாக அனுமதிக்கப்பட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் 2017 முதல் இதுவரை சம்பளம் பெற முடியவில்லை. உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கையை அரசு காரணம் காட்டுகிறது. ஆனால் ஒரே நிர்வாகத்தின் கீழ் உபரி ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளிலும் உள்ள ஆசிரியர்களும் சம்பளம் வழங்க மறுக்கப்படுகிறது.
பல ஆண்டுகளாக வாழ்வாதாரம் இழந்து தவிக்கின்றனர். இதுஉட்பட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பலமுறை முதல்வர் வரை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவர் அனுமதி பெற்று பல்வேறு சபைகள் இணைந்து தொடர் போராட்டங்கள், சென்னையில் இயக்குநர் (டி.பி.ஐ.,) அலுவலகம் முற்றுகை போராட்டம் என அடுத்தடுத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக