மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு மாணவனைக் கணக்கிற்குப் பயன்படுத்தும் காம்பஸைக் கொண்டு சக மாணவர்கள் 108 முறை குத்தியுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டது. பின்னர் அவன் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளான். கடந்த நவ.24 அன்று நடந்த இந்த சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை அளிக்குமாறு குழந்தைகள் நலக்குழு தெரிவித்திருப்பதாகக் காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்த வழக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிப்பதாக குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் பல்லவி போர்வல் தெரிவித்துள்ளார்.
இந்த இளம் வயதில் வன்முறையைக் கையிலெடுக்க என்ன காரணமாக இருக்கும் என்பது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். தாக்குதலில் ஈடுபட்ட குழந்தைகளின் பெற்றோரிடம் விசாரணை நடந்துவருகிறது. குழந்தைகள் அதிக வன்முறைகளை உள்ளடக்கிய விடியோ கேம்கள் விளையாடுகிறார்களா என்பது தொடர்பான விசாரணைகள் நடந்து வருவதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுவனது உடலில் ஊசியால் குத்திய காயங்கள் உள்ளதாகப் பெற்றோர் கூறியுள்ளனர். சிறுவனைத் தாக்கிய சிறுவர்கள் அனைவரும் 10 வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்தின்படி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன என காவல் உதவி ஆய்வாளர் விவேக் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக