அரசுப் பேருந்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொங்கிக் கொண்டே பயணித்த மாணவர்களை அடித்துக் கீழே இறக்கிய விவகாரத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த பாஜக பெண் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார், இது தனக்குக் கிடைத்த வெற்றியல்ல ஒவ்வொரு தாய்க்குமான வெற்றி என்று பேட்டி கொடுத்தார். கூடவே போக்குவரத்துத் துறைக்கே சில யோசனைகளையும் முன்வைத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், "நம் நாட்டில் தட்டிக் கேட்பதெல்லாம் நடக்கவே நடக்காதென்று நினைத்திருந்தேன். ஆனால், நியாயமான விஷயத்துக்கு தட்டிக்கேட்டால் நீதி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். இதுக்காக எல்லோரும் அடிச்சு தான் கேட்க வேண்டும் என்று சொல்ல வரவில்லை. எல்லோரும் போய் அடித்துக் கேளுங்கள், பஸ்ஸை நிப்பாட்டுங்கனு என்றும் சொல்ல வரவில்லை. அது ஒரு தப்பான செயலாக இருக்கலாம். ஆனால் என்னோட நோக்கம் கரெக்ட் தான். நாம் நம் வீட்டிலேயே நல்ல முறையில் பிள்ளைகளை வளர்த்தால். பெற்றோர்கள் தங்கள் கடமையைச் செய்தால் பப்ளிக் இப்படி இறங்க வேண்டிய அவசியம் இருக்காது.
போக்குவரத்துத் துறையும் எப்படி பெண்களுக்கு ஒரு தனி பேருந்து இயக்குகிறதோ அதுபோல் மாணவர்களுக்கு என தனியாக சிறப்புப் பேருந்துகள் இயக்கலாம். ஐடி கார்டு வைத்துள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் இலவசமாக அதில் பயணிக்கட்டுமே. பேருந்துகளில் க்ளோஸ்ட் விண்டோஸ் வைங்க. பசங்களோடு பாதுகாப்பு உறுதியாகும். இது எனக்கான வெற்றி இல்லை. ஒவ்வொரு தாய்க்கான வெற்றி" என்றார்.
வன்முறையை அம்பலப்படுத்திய வீடியோ: காஞ்சிபுரம் மாவட்டம், கெருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ரஞ்சனா நாச்சியார். சினிமா நடிகை. பாஜகவில் கலை மற்றும் கலாசார பிரிவு மாநில செயலாளராக உள்ளார். போரூரில் இருந்து குன்றத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தில் நேற்று முன்தினம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணிப்பதைக் கண்டார். சிலர் பேருந்தின் மேற்கூரையைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவர்கள் செல்வதைக் கண்ட ரஞ்சனா நாச்சியார், பேருந்தின் குறுக்கே சென்று மறித்து நிறுத்தி இருக்கிறார்.
பேருந்தின் ஓட்டுநரையும் டிரைவரையும் கடுமையாக கண்டித்துப் பேசினார். அவராகவே சென்று படிக்கட்டில் தொங்கியவர்களை இறங்கிச் செல்லுமாறு ஆவேசமாக எச்சரித்தார். இறங்க யோசித்த சிலரை தாக்கினார். ஒருமையில் பேசியதோடு, அவர்களை அடித்து இறக்கினார். எதிர்ப்பு தெரிவித்த சிலரிடம், ‘ஆமா... நான் போலீஸ் தான் இறங்கு..’ என்று கூறினார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
இதுதொடர்பான வீடியோ பதிவு சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. ரஞ்சனா நாச்சியாரை யார் என்று அடையாளம் தெரியாத நிலையில், பலரும் அவரை ‘வீரப் பெண்மணி’ என்று தங்களது பதிவுகளில் வர்ணித்தனர். மேலும் அவரது செயலை நியாயப்படுத்தினர். வேறு சிலர், ‘அவருடைய கோபம் சரிதான்.. ஆனால் சட்டத்தை கையில் எடுத்து அவர் மாணவர்களை எப்படித் தாக்கலாம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர். மாணவர்களை அடித்து கீழே இறக்கியது பாஜக பெண் நிர்வாகி என்று தெரியவந்ததும், சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கடும் விமர்சனங்கள் பரவின.
இந்நிலையில், பேருந்து சென்ற வழித்தடம் மற்றும் ரஞ்சனா நாச்சியாரின் இருப்பிடத்தை போலீஸார் கண்டறிந்தனர். அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர். கைது செய்யப்படும் சமயத்தில், ‘வாரண்ட் இருக்கிறதா.. எஃப்.ஐ.ஆர் காட்டுங்கள்’ என்று கேட்டு போலீஸாருடன் ரஞ்சனா நாச்சியார் வாக்குவாதம் செய்தார். பெண் போலீஸார் உதவியுடன் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று ரஞ்சனா நாச்சியாரை போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
அரசு பேருந்தை வழிமறித்தல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ரஞ்சனா நாச்சியார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிபந்தனைகளுடன் ஜாமீனில் விடுவிப்பு: கைது செய்யப்பட்ட ரஞ்சனா நாச்சியாரை போலீஸ் பாதுகாப்புடன் ஸ்ரீபெரும்புதூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் குற்றவியல் நீதித்துறை நடுவர் ராம்குமார் முன்பு போலீஸார் ஆஜர்படுத்தினர். பேருந்தில் ஆபத்தான முறையில் பயணித்த மாணவர்களை தாய் உள்ளத்தோடும் சமூக அக்கறையுடனும் ரஞ்சனா நாச்சியார் கண்டித்துள்ளார்.
யாரையும் துன்புறுத்த வேண்டுமென்ற நோக்கத்துடன் அவர் செயல்படவில்லை. இவரை தண்டித்தால் சமூக செயல்பாட்டாளர்கள் சமூகப் பணியை மேற்கொள்வதற்கு தயக்கம் காட்டுவார்கள். எனவே இவரை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என நாச்சியார் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் முறையிட்டனர்.
இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராம்குமார் ரஞ்சனா நாச்சியாருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதன்படி அவர் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் மாங்காடு காவல் நிலையத்தில் 40 நாட்கள் கையெழுத்து இடவேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
‘பேருந்துகள் அதிகரிக்கப்படும்’ - மாநகர போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் இந்த சம்பவம் குறித்து கேட்டபோது, “மாணவர்களின் தேவைக்கேற்ப பேருந்து சேவைகளை அதிகரிக்க முயற்சித்து வருகிறோம். பேருந்துகளில் தொங்கிக் கொண்டு பயணிப்போர் குறித்து காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறு ஓட்டுநர், நடத்துநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மூடும்வகையில் கதவு வைத்த பேருந்துகளை அதிகம் கொள் முதல் செய்ய பரிந்துரைக்கப்படும்” என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக