இந்த வலைப்பதிவில் தேடு

CPS - 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டம்

ஞாயிறு, 5 நவம்பர், 2023

 



பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். ஆசியாவிலேயே பெரிய வலையமைப்பை கொண்டது இந்திய ரயில்வே துறை. மற்ற போக்குவரத்தை விட ரயில் போக்குவரத்தையே மக்கள் அதிகம் விரும்புகின்றனர். இதற்கு காரணம் குறைந்த கட்டணத்தில் அதிக வசதி கிடைப்பதுதான். அதிலும் நீண்ட தூர பயணத்துக்கு ரயில் போக்குவரத்தை மட்டுமே மக்கள் நம்புகின்றனர்.


சரக்குகளும் அதிக அளவில் ரயில்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இந்திய ரயில்வேயில் உயர் மட்ட அதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சுமார் 11 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். இவர்களில் 75,000 ரயில்வே பாதுகாப்பு படை வீரர்களும் அடக்கம். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும் என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தன. ஆனால் இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. எனவே இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும், மேலும் 8வது ஊதியக்குழு அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில்வே தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.


இதுபற்றி தென்னக ரயில்வே தொழிற்சங்க நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, இந்திய அளவில் என்எப்ஐஆர், ஏஐஆர்எப் ஆகிய 2 தொழிற்சங்கங்கள் மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்பட்டவை. இதில் ஏஐஆர்எப் அரசியல் கட்சிகள் சாராதது. என்எப்ஐஆர் காங்கிரஸ் சார்புடையது. இதுதவிர 15க்கும் மேற்பட்ட சிறிய தொழிற்சங்கங்கள் உள்ளன. இந்த தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியா முழுவதும் உள்ள ஊழியர்கள் மத்தியில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த வாக்கெடுப்பு வரும் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடைபெற உள்ளது. வாக்கெடுப்பில் வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு இருந்தால், அதன்பிறகு காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்கும் தேதியை குறிப்பிட்டு முறைப்படி வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்படும் என்றார்.


போக்குவரத்து ஊழியர்கள், லாரி டிரைவர்கள் ஸ்டிரைக் நடைபெறும்போதெல்லாம் மக்களுக்கு கைகொடுத்தது ரயில் போக்குவரத்துதான். இப்போது ரயில்வே ஊழியர்களே ஸ்டிரைக்கில் ஈடுபட முடிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1974ம் ஆண்டு ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்களும் 20 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போது 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் சூழல் உருவாகி உள்ளது. அப்படி வேலைநிறுத்தம் நடந்தால், நாடு முழுவதும் முற்றிலும் ரயில் சேவை முடங்கும்.


ஒருவேளை வேலைநிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கங்கள் அரசுக்கு நோட்டீஸ் கொடுத்து விட்டால், அதன்பிறகு ஒன்றிய ரயில்வே அமைச்சக அதிகாரிகள் தொழிற்சங்கத்தினரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால், ஸ்டிரைக் துவங்கும். கடந்த 2016ம் ஆண்டும் வாக்கெடுப்பு நடத்தி, வேலைநிறுத்த நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அப்போது ரயில்வே நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியதால், வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent