'தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, திட்டமிட்டபடி வரும், 28ல் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும்' என, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறியதாவது:
ஜாக்டோ ஜியோ பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இயக்கங்களை நடத்தி வருகிறது. அதன்படி, வரும், 28ல் அறிவித்த சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அறிவித்த உறுதிமொழியை, முதல்வராக பொறுப்பேற்றதும் ஸ்டாலின் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை பொய்த்து விட்டது.
அகவிலைப்படி நிலுவை தொகை மூன்று முறை மறுக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
அமைச்சர்களுடன் நடந்த பேச்சில் எங்கள் கோரிக்கைகள், முதல்வரின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு தீர்வு காணப்படும் என்று கூறியும் நிறைவேறவில்லை.
பழைய ஓய்வூதிய திட்டத்தை ஐந்து மாநிலங்களில் அமல்படுத்தியும், தமிழகத்தில் தொடர்ந்து மவுனம் காக்கின்றனர். ஏற்கனவே பெற்று வந்த சரண்டர் விடுப்பு காலவரையறையின்றி முடக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தில் உள்ள முரண்பாடுகள் களையப்படவில்லை.
ஆதலால், திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும்; அதில், ஐந்து லட்சம் பேர் பங்கேற்பர். எனவே ஒருங்கிணைப்பாளர்களை முதல்வர் அழைத்துப் பேச வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக