இந்த வலைப்பதிவில் தேடு

ஐந்தாண்டு சட்ட படிப்பில் தமிழ் பாடம்

வெள்ளி, 22 டிசம்பர், 2023

 



ஐந்தாண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் பாடம் இடம்பெறும் என சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.


மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் சார்பில் ஆட்சிமொழி சட்ட வாரவிழா சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக கூட்டரங்கில் நேற்று நடந்தது. இதில் அமைச்சர் ரகுபதி பேசியதாவது:


பல்வேறு மாநிலங்களில் சட்டப் படிப்பில் தாய்மொழி ஒரு பாடமாக இடம்பெற்றுள்ளது. கர்நாடகத்தில் சட்டப் படிப்பில் கன்னடம் ஒரு பாடமாக இருந்து வருகிறது. அதேபோல், தமிழகத்திலும் அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் 5 ஆண்டு சட்டப் படிப்பில் வரும் கல்வி ஆண்டு முதல் தமிழ் ஒரு பாடமாக இடம்பெறும். முதல்வர் சார்பில் இதை அறிவிக்கிறேன்.


சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற கிளை சென்னையில் அமைய வேண்டும் என்ற கோரிக்கைகளை நீதிபதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளிலும், கூட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். 


மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையம் மேற்கொண்டு வரும் 100 சட்டங்களை தமிழ்மொழியாக்கம் செய்யும் பணியை விரைந்து முடித்து, சட்ட நூல் தொகுப்புகளை வெளியிட வேண்டும் என்றார்.


தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, சட்ட ஆட்சிமொழி ஆணையத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தமிழ் வளர்ச்சித் துறை செய்யும் என்று உறுதியளித்தார்.


மாநில சட்ட ஆட்சிமொழி ஆணைய தலைவர் நீதிபதி இரா.தாரணி, ஆணையத்தின் முழுநேர உறுப்பினர்கள் அ.முகமது ஜியாவுதீன், ச.கோபி ரவிகுமார், வி.வில்ஸ்றோடாஸ்பின், சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் என்.எஸ்.சந்தோஷ்குமார், பதிவாளர் கவுரி ரமேஷ் பங்கேற்றனர். ஆணைய பகுதிநேர உறுப்பினரும், புதுக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியருமான சு.முரளி அரூபன் வரவேற்றார். பகுதிநேர உறுப்பினர் கனிமொழி மதி நன்றி கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent