மதுரையில் எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டத்தின் கீழ் வளாகங்களை துாய்மைப்படுத்த ஒதுக்கப்பட்ட நிதி, பணிகள் முடிந்து பல நாட்களாகியும் இதுவரை பள்ளிகளுக்கு வந்துசேரவில்லை என, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.இத்திட்டத்தில் மாவட்டத்தில் 1,249 அரசு தொடக்க, உயர், மேல்நிலை பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டது.
இதில் ஜன.8 முதல் 10 வரை அனைத்து பள்ளிகளிலும் துாய்மை பணிகள் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தன்சுத்தம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, மறுசுழற்சி முக்கியத்துவம் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்ப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
பணிகள் குறிப்பிட்ட நாட்களில் முடிந்தும் அரசு ஒதுக்கிய நிதி இன்னும் வந்து சேரவில்லை என சர்ச்சை எழுந்துள்ளது.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:பணிகள் துவங்குவதற்கு முன்பே பள்ளிக்கு தலா ரூ. 1000 வீதம் நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் இதுவரை வந்தபாடில்லை. ஜன. 8 முதல் 10 வரை தலைமையாசிரியர்கள் சொந்த பணத்தில் துாய்மை பணிகளை செய்தனர்.
பணி நடக்கும் போதே ஆன் ஸ்பாட்டில் இருந்தே எமிஸில் பதிவேற்றம், அதிகாரிகள் விசிட் என ஆசிரியர்களை அல்லோகலப்படுத்தினர். ஆனால் நிதி ஒதுக்கியும் இன்னும் வரவில்லை.இதற்கிடையே நடுநிலை பள்ளிகளில் ஏற்கனவே காய்கறி தோட்டம் அமைக்க ஒதுக்கிய ரூ.5 ஆயிரத்தில் துாய்மை பணிக்கான ரூ.1000 ஐ ஈடுசெய்ய வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளது.
அப்படியென்றால் மிளிரும் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி எங்கே போனது. பள்ளி மானியம் உள்ளிட்ட எந்த நிதி ஒதுக்கீடுகளையும் கல்வித்துறை அதிகாரிகள் உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு விடுவிப்பதில்லை. ஆசிரியர்களை செலவிட வைத்து சர்ச்சையை ஏற்படுத்துவது தொடர் கதையாகிறது. இனியாவது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக