அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் சர்வர் பிரச்னையால், சம்பள பட்டியல் பதிவேற்ற முடியாமல் மனஉளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கான சம்பள பட்டியல் மாதத்தில் 15ம் தேதிக்கு பின் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும். சம்பள பில் ஒப்புதலுக்குபின் அதை பெற்று, 25 ம் தேதிக்குள் கருவூலகத்தில் ஒப்படைத்தால் தான், தடையின்றி சம்பளம் பெற முடியும். தற்போது நிலவும் சர்வர் பிரச்னையால் சம்பள பட்டியலை பதிவேற்றம் செய்ய முடியாமல் அரசு அலுவலர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து அலுவலர்கள் கூறியதாவது, ஒவ்வொரு மாதமும் நடக்கும் இந்த சர்வர் பிரச்சனையால் அலுவலர்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனை கையாளும் தனியார் நிறுவனம் 15ஆம் தேதிக்கு மேல் தான் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்து வரும் நிலையில் இம்மாதம் தேதி 18 ஆகியும் பதிவேற்றம் செய்ய முடிய வில்லை. இந்த மாதம் முடிய சில நாட்களே உள்ள நிலையில் சம்பள பில் உருவாக்கி, சம்பளம் பெறுவது என்பதே பெரும் சவாலாக இருக்கும்.
வருமான வரி பிடித்தம் செய்யும் மாதமாக இருப்பதால் அது சம்பந்தமான பதிவுகளை அரசு ஆசிரியர்கள் உள்ளீடு செய்ய வேண்டி இருப்பதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர். அரசு ஊழியர்களின் வசமே இந்த சம்பள சாப்ட்வேர் தயாரிப்பு இருந்தால் தான் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும், என்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக