பள்ளி மாணவர்களிடையே அரங்கேறும் வன்முறை சம்பவங்களை தடுக்கும் நடவடிக்கையாக, தில்லியில் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களின் புத்தகப் பைகள் மற்றும் உடமைகளை பரிசோதனை செய்ய குழு ஒன்றை அமைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
தெற்கு டெல்லியின் நெப் சராய் பகுதியில் கடந்த வாரம், 11-ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் சக மாணவர்களால் தாக்கப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தில்லியில் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் தில்லி கல்வித்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில் பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க தில்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வகுப்பறைகள் மற்றும் பணியாளர் அறைகளுக்குள் பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது, பள்ளி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள அனைத்து கண்காணிப்புக் கேமராக்களும் 24 மணி நேரமும் செயல்பட வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சிலர் தங்கள் பைகளில் ஆயுதங்களை மறைத்து வைத்து எடுத்து வருவதை தடுக்கும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக