சிதம்பரம் அருகே நான்குவழிச் சாலைக்காக நெடுஞ்சாலைத் துறை சி.முட்லூா் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி கட்டடங்களை இடிப்பதற்காக, கட்டடங்களை காலி செய்து தர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், மாற்று இடத்தை வழங்கிய பின்னா் கட்டடத்தை இடிக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்களைக் கொண்ட பள்ளி மேலாண்மைக் குழு கோரிக்கை விடுத்தது.
சிதம்பரம் அருகே உள்ள சி முட்லூா் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகள் தனித்தனியாக இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் சி.முட்லூா், சுற்றுவட்டார கிராமப் பகுதிகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். இந்தப் பள்ளியின் முகப்பில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் வழியாக நாகப்பட்டினம் - விழுப்புரம் நான்குவழி புறவழிச்சாலை அமைக்கும் பணி கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. சாலை அமைக்க பள்ளி இடம் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளியை வேறு இடத்தில் கட்டிக்கொடுப்பதாக தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் உறுதியளித்தனா். தோ்வு நேரம் என்பதால், பள்ளியை இடிப்பதற்கு முன்பு இங்கு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்விக்கு எந்தவித இடா்பாடுமின்றி மாற்று இடத்தை ஏற்பாடு செய்த பிறகே, பள்ளியை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.முட்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் வேதநாயகி மற்றும் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் நெடுஞ்சாலை, கல்வித் துறைகளுக்கும், மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனா்.
இந்த நிலையில், திடீரென தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் பள்ளியில் உள்ள பொருள்களை காலி செய்து மாணவா்களை அப்புறப்படுத்த வேண்டும் என கூறியுள்ளனா். இதனிடையே, சி.முட்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் வேதநாயகி தலைமையில், பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள் பங்கேற்ற பள்ளி மேலாண்மைக்குழு ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாணவா்களுக்கு மாற்று இடம் தயாா் செய்து கொடுத்த பிறகே பள்ளியை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றி, மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் மற்றும் கல்வித் துறையினக்கு அனுப்பினா்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக