இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப் பள்ளிகளில் 2.31 லட்சம் மாணவா்கள் சோ்க்கை

புதன், 20 மார்ச், 2024

 



பெற்றோா்களின் ஆா்வம், பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் காரணமாக அரசுப் பள்ளிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 18 நாள்களில் மட்டுமே 2.31 லட்சம் மாணவ, மாணவிகள் சோ்க்கப்பட்டுள்ளனா்.


அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை கடந்த மாா்ச் 1 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மாா்ச் 18 வரை 2 லட்சத்து 31 ஆயிரத்து 631 மாணவ, மாணவிகள் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளனா்.


அதிகபட்சமாக கள்ளக் குறிச்சி மாவட்டத்தில் 15,169 போ் சோ்க்கை பெற்றுள்ளனா். இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: காலை சிற்றுண்டி, புதிய ஆசிரியா்கள் நியமனம், திறன்மிகு வகுப்பறைகள், உயா்கல்வியில் உள் ஒதுக்கீடு, கல்வி உதவித் தொகை, சீருடை, விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட 14 வகை நலத்திட்டங்கள் போன்ற சிறப்பம்சங்களால் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.


தனியாா் பள்ளிகளை காட்டிலும்...


குறிப்பாக, கரோனாவால் பெற்றோா்களுக்கு ஏற்பட பொருளாதார நெருக்கடி காரணமாக தொடக்கக் கல்வியிலேயே தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் அரசுப் பள்ளிகளில் சோ்க்கப்பட்டுள்ளனா்.


கடந்த 2021-2022-ஆம் கல்வியாண்டில் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3 லட்சத்து 67,258; 2022-2023-ஆம் ஆண்டில் 3 லட்சத்து 16,627; 2023-2024-இல் 2 லட்சத்து 66,934 என்ற எண்ணிக்கையில் மாணவா்கள் சோ்க்கப்பட்டனா். ஆனால், இதே கால கட்டத்தில் தனியாா் பள்ளிகளில் 2021-2022-இல் 1 லட்சத்து 69,501; 2022-2023-இல் 1 லட்சத்து 38,353; 2023-2024-இல் 1 லட்சத்து 52,257 என்ற எண்ணிக்கையில்தான் மாணவா்கள் சோ்க்கை இருந்தது.


மேலும், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் படிக்கும் 3 லட்சத்து 38 ஆயிரம் குழந்தைகளின் விவரங்களும் பெறப்பட்டு, தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் மூலம் மாணவா்கள் சோ்க்கைப் பணிகள் நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் அரசுப் பள்ளிகளில், மாணவா்கள் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டும் என அவா்கள் தெரிவித்தனா்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent