தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை விரிவு படுத்த, பள்ளிகளில் அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
நகரப் பகுதிகளிலும், கிராமப் பகுதிகளிலும் பள்ளிக்கு செல்லக்கூடிய குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் அரசுக்கு கிடைத்திருக்கிறது.பள்ளிகள் தூரமாக இருப்பது மட்டுமல்ல, சிலருடைய குடும்ப சூழலும் இதற்கு காரணமாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கினார்.
இத்திட்டத்திற்காக 2023ம் ஆண்டில் ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக சமீபத்தில் நடந்து முடிந்த பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்திற்கு 2024ம் ஆண்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற அனைத்து நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் 31 ஆயிரத்து 8 அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகள் பயன் அடையும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரகப் பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் இந்த காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
காலை உணவு வழங்குவதற்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்துக்கு வழங்கப்பட்டது போல, இந்த திட்டத்துக்கும் பள்ளிகளிலேயே தனியாக உணவுப் பொருட்கள் வைப்பதற்கும், சமையல் செய்வதற்கு தேவையான இட வசதி அமைத்து கொடுப்பதற்கும், காலை உணவுத் திட்டம் முழுமையாகவும், செம்மையாகவும் செயல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க அறிவுறுத்திட வேண்டும்.
மேலும் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் மாவட்டக் கல்வி அலுவலர்களை உள்ளடக்கிய குழு அமைத்து ஒரு வார காலத்துக்குள் சம்பந்தப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளை பார்வையிட்டு காலை உணவுத் திட்டம் செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதை உறுதிசெய்யவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக