இந்த வலைப்பதிவில் தேடு

திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு பெற முடியாது!

செவ்வாய், 12 மார்ச், 2024

 




திறந்தநிலை பல்கலை வழங்கும் பட்டங்களை எப்படி கருத வேண்டும் என்பதற்கான விதிமுறைகளை, உடனடியாக பல்கலை மானிய குழு வகுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.


சென்னை பல்கலையில் உதவியாளர்களாக பணி நியமனம் பெற்ற பலர், திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றனர். அதன் அடிப்படையில், பிரிவு அதிகாரி வரை பதவி உயர்வும் பெற்றனர். உதவி பதிவாளர் பதவிக்கான பதவி உயர்வு பட்டியலில், இவர்களின் பெயர் இடம் பெறவில்லை. அதேபோல, பிரிவு அதிகாரிகள் பதவிக்கான பதவி உயர்வு பட்டியலில், திறந்தநிலை பல்கலை பட்டம் பெற்ற உதவிப்பிரிவு அதிகாரிகள் இடம் பெறவில்லை.


தள்ளுபடி

சிண்டிகேட் முடிவின் அடிப்படையில், சென்னை பல்கலை இந்த நடவடிக்கையை எடுத்தது. பதவி உயர்வு பட்டியலில் இடம் பெறாததை எதிர்த்து, திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்ற அதிகாரிகள் தாக்கல் செய்த மனுக்களை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.


இதை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டது. அதேபோல, இவர்களுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, முறைப்படி பட்டம் பெற்றவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.


குறையில்லை


இந்த மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு:


பல்கலையில் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம், சிண்டிகேட்டுக்கு உள்ளது. பணிகளுக்கான தகுதி நிர்ணயம்; எப்படி நியமனம் மேற்கொள்வது; பதவி உயர்வுக்கு பின்பற்ற வேண்டிய அம்சங்கள் குறித்து சிண்டிகேட் முடிவு செய்யலாம்.


திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களை சேர்க்காமல், முறைப்படி தயாரிக்கப்பட்ட பதவி உயர்வு பட்டியலில் குறை காண முடியாது. எனவே, திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் நிராகரிக்கப்படுகின்றன. திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்று, பதவி உயர்வு பெற்றவர்களில் பெரும்பாலானோர், 2014ல் ஓய்வு பெற்றிருப்பர். அடுத்தகட்ட பதவி உயர்வு கோரி வழக்கு தொடர்ந்திருந்தாலும் அவர்களுக்கு உரிமை இல்லை. 


சிண்டிகேட் தீர்மானத்தின்படி, முறைப்படி பட்டம் பெற்றவர்கள் மட்டுமே பதவி உயர்வு பெற முடியும் என்பதால், திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்கள் மேற்படி பதவி உயர்வு பெற முடியாது. ஏற்கனவே பதவி உயர்வு பெற்றவர்களை, இடையூறு செய்ய வேண்டியதில்லை. மேற்படி பதவி உயர்வு பெற திறந்தநிலை பல்கலையில் பட்டம் பெற்றவர்களுக்கு உரிமையில்லை என்றாலும், ஏற்கனவே பதவி உயர்வு பெற்றிருந்தால், அவர்களை இடையூறு செய்ய வேண்டாம்; அவர்கள் பெற்ற சலுகைகளிலும் இடையூறு செய்ய வேண்டாம். முறைப்படி பட்டம் பெற்றவர்கள், சீனியாரிட்டி அடிப்படையில் பதவி உயர்வு பெற உரிமை உள்ளது. 


தேசிய பிரச்னை


சட்டப்படி ஏற்படுத்தப்பட்ட திறந்தநிலை பல்கலை வாயிலாக பெறும் பட்டங்களை, எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான முழுமையான விதிமுறைகளை வகுக்க, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., முன்வர வேண்டும். விரிவான விதிமுறைகளை யு.ஜி.சி., வகுக்கும் போது, அவற்றை அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைகள் பின்பற்ற முடியும்; வேலைவாய்ப்புக்கு இந்தப் பட்டங்கள் செல்லாது என, குறைத்தும் மதிப்பிட முடியாது.


 தேசிய பிரச்னையாக உள்ளதால், இதற்கு உடனடியாக தீர்வு காண, யு.ஜி.சி., முன்வர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent