இந்த வலைப்பதிவில் தேடு

குழந்தைகள் கடத்தல் வதந்தி - காவல் உதவி ஆணையர் எச்சரிக்கை

வெள்ளி, 8 மார்ச், 2024

 


குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 


பள்ளி குழந்தைகளை வடமாநில வாலிபர்கள் கடத்திச் செல்வதாகவும், இதற்காக பெண் வேடங்களில் ஆண்கள் சுற்றுவதாகவும் கடந்த சில நாட்களாக தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் இரு தினங்களில் தாழம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. 


இதையடுத்து, போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியதில் அது வெறும் புரளி என தெரியவந்தது. கேளம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


இதனால், அவர்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையிலும், மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகம் சார்பில் பள்ளிகளில் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 


கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற முதல் விழிப்புணர்வு கூட்டத்தில் கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் தீபக் குமார் ஆகியோர் கலந்துகொண்டு குழந்தை கடத்தல் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், அது குறித்த தகவல்களை யாருக்கும் அனுப்பவோ பரப்பவோ கூடாது என்றும் கூறினர். யாரேனும் வதந்திகளை பரப்பினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent