தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 5 நாட்களுக்கு 106 டிகிரி வெயில் கொளுத்தும் என்றும், அதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. அதன் காரணமாக திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. மதுரை, திருச்சி, நாமக்கல், வேலூர், தர்மபுரி மாவட்டங்களில் 104 டிகிரி வெயில் கொளுத்தியது.
திருத்தணி, கோவை, பாளையங்கோட்டை, சென்னை மாவட்டங்களில் 102 டிகிரி வெயில் நிலவியது. தமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருந்தது. ஒரு சில இடங்களில் 102 டிகிரி (பாரன் ஹீட்) முதல் 106 டிகிரி வரையும், கடலோர பகுதிகளில் சராசரியாக 100 டிகிரி வரையும், மலைப்பகுதிகளில் 98 டிகிரி வரையும் பதிவாகியுள்ளது.
சென்னை, தஞ்சாவூர், கோவை, கடலூர், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, நீலகிரி, வேலூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. அதன் காரணமாக 10ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலையை பொறுத்தமட்டில், 8ம் தேதி வரை ஒருசில இடங்களில் இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். இன்று முதல் அடுத்த 5 நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை வடதமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 102 டிகிரி பாரன்ஹீட் முதல் 106 டிகிரி வரையும், உள் மாவட்டங்களில் சமவெளிப் பகுதிகளில் அனேக இடங்களில் 90 டிகிரி முதல் 100 டிகிரி வரையும், மற்றும் கடலோரப் பகுதிகளில் சராசரியாக 99 டிகிரி வரையும் இருக்கும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம். சென்னை மாவட்டத்தில் 101 டிகிரி வெயில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக