இந்த வலைப்பதிவில் தேடு

பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் - உயர் நீதிமன்றம் உத்தரவு

வெள்ளி, 5 ஏப்ரல், 2024

 



கோவையில் கடந்த மார்ச் 18ம் தேதி பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கோவையில் உள்ள சாய்பாபா வித்யாலயம் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களை சீருடையிலேயே அழைத்துச் சென்றதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கோவை சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் பள்ளி நிர்வாகத்தினருக்கு எதிராக சிறார் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி தனியார் பள்ளி தலைமை ஆசிரியை புகழ் வடிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பிரதமர் நிகழ்ச்சி காரணமாக மாணவர்களை அழைத்துச் செல்லும்படி பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோரால் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படாத குழந்தைகள் மட்டுமே பேரணிக்கு சென்றனர். அதற்கு எப்படி பொறுப்பேற்க முடியும் என தலைமை ஆசிரியை தரப்பில் வாதிடப்பட்டது.


இதற்கு அரசு வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரி விசாரணை நடத்திய பின்னரே புகார் அளிக்கப்பட்டது. பிரதமர் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் தலைமை ஆசிரியை உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் பங்கேற்றிருந்தனர். அரசு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டிருந்தால் அதில் பள்ளிக்குழந்தைகள் பங்கேற்பதில் தவறில்லை. ஆனால், அரசியல் நிகழ்ச்சியில் பள்ளிக் குழந்தைகள் பங்கேற்றது தவறு. நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் நீண்ட நேரம் குழந்தைகளை நிற்க வைத்தது, அவர்களுக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்றார்.


இதையடுத்து நீதிபதி, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளிக் குழந்தைகள் சென்றது தொடர்பாக பெற்றோர்கள் எதுவும் புகார் அளித்தார்களா, நிகழ்ச்சியில் இருந்த போது பள்ளி ஆசிரியர்கள் யாரும் உடனிருந்தார்களா, இந்த விஷயத்தில் சிறார் நீதிச் சட்டம் எப்படி பொருந்தும் என்று விளக்கமளிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணையை ஏப்ரல் 8ம் தேதி பிற்பகலுக்கு தள்ளிவைத்தார். மனுதாரர் கோரிக்கையை ஏற்று, பள்ளி நிர்வாகம் மீது மறு உத்தரவு வரும் வரை கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Popular Posts

Recent