இந்த வலைப்பதிவில் தேடு

கற்றுக் கொடுத்த ஆசிரியருக்கு அதிர்ச்சி கொடுத்த முன்னாள் மாணவன்

வியாழன், 11 ஏப்ரல், 2024

 




திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர், தாசர்புரம், 3-வது தெருவைச் சேர்ந்தவர் கிருபாகர் ஜான் (59). இவரின் மனைவி ஞானதீபம். இவர்கள் இருவரும் திருநின்றவூர், தாசர்புரம் பகுதியில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியர்களாக உள்ளனர். 


கடந்த 27.3.2024-ம் தேதி வழக்கம் போல இருவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டனர். பின்னர், மதிய உணவு சாப்பிட இருவரும் வீட்டுக்குச் சென்றனர். வீட்டின் முன்பக்க கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது இருவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. 


அதாவது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக்கிடந்தன. பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 40 சவரன் தங்க நகைகள், 30,000 ரூபாய் ஆகியவை திருட்டுப் போயிருந்தது.


இதுகுறித்து கிருபாகர் ஜான், திருநின்றவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை நிபுணர்கள் பதிவுசெய்தனர். 


பின்னர் ஐ.பி.சி 454, 380 ஆகிய இரண்டு பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த வீடு அமைந்துள்ள பகுதியில் உள்ள சி.சி.டி.வி-க்களை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல சீருடையில் இளைஞர் ஒருவர், கிருபாகர் ஜான் வீட்டின் அருகே செல்லும் காட்சி போலீஸாரின் கண்ணில்பட்டது. அதனால் அந்த இளைஞர் யாரென்று போலீஸார் விசாரித்தனர்.


விசாரணையில் அந்த இளைஞர்தான் ஆசிரியர் கிருபாகர் ஜான் வீட்டில் நகைகள், பணத்தைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் சத்யா (20) என்றும், திருநின்றவூர் சுரேசி நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. 


தொடர்ந்து சத்யாவிடமிருந்து நகைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது கிருபாகர் ஜானும் அவரின் மனைவியும் ஆசிரியர்களாக பணியாற்றும் பள்ளியில்தான் சத்யா படித்திருக்கிறார். சத்யாவுக்கு ஆசிரியர் கிருபாகர் ஜான் பாடமும் கற்றுக் கொடுத்திருக்கிறார்.


அதனால் கிருபாகர் ஜான் குறித்த விவரங்கள் சத்யாவுக்கு தெரியும். வீட்டில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதைத் தெரிந்துக் கொண்ட சத்யா, இந்தத் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதோடு நகை, பணத்தை திருட என்ன காரணம் என்று சத்யாவிடம் போலீஸார் விசாரித்தபோது, `என்னுடைய அப்பா வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். 


அவரை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டது. அதனால் கிருபாகர் ஜான் வீட்டில் பகல் நேரத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை தெரிந்து அங்கு உணவு டெலிவரி செய்வதைப் போல சென்று நகை, பணத்தைத் திருடினேன்' என சத்யா கூறியதாக திருநின்றவூர் போலீஸார் தெரிவித்தனர். விசாரணைக்குப் பிறகு சத்யாவை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent