இந்த வலைப்பதிவில் தேடு

அரசுப்பள்ளி ஆசிரியர் கைது

ஞாயிறு, 7 ஏப்ரல், 2024

 



திருப்பூரில் அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டார். பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-.


திருப்பூர் பி.என்.ரோடு பிச்சம்பாளையம்புதூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை
கருப்பசாமி (வயது 41) என்ற ஆசிரியர் நேற்று முன்தினம் பள்ளியின் மாடிக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.


மேலும் மாணவியிடம் அந்த ஆசிரியர் தவறாக பேசியதுடன், தவறாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பள்ளி முடிந்து வீட்டிற்கு சென்றதும் மாணவி பெற்றோரிடம் கூறி உள்ளார்.


இந்த நிலையில் நேற்று காலை அந்த மாணவி வழக்கம்போல் பள்ளிக்கு வந்துள்ளார். அப்போது அந்த ஆசிரியர், மாணவியிடம் பள்ளியில் நடந்ததை ஏன் பெற்றோரிடம் சென்று கூறினாய் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவி பள்ளி வளாகத்தில் நின்று அழுது கொண்டிருந்தார்.


இதுபற்றி தகவலறிந்ததும் மாணவிகளின் பெற்றோர், உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாணவியின் சித்தி பள்ளிக்குள் சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியரை தாக்கியதாகவும் தெரிகிறது. இது குறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து வந்து ஆசிரியர் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள்.


இதைத்தொடர்ந்து மாணவி சார்பில் கொங்குநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் ஆசிரியர் மற்றும் மாணவியிடம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து ஆசிரியர் கருப்பசாமியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 

Recent